கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்த மாணவி டில்ஷி அம்ஷிகாவிற்கு நீதி கோரி கொழும்பில் இன்று(8) மாபெரும் போராட்டமொன்று ஆரம்பமாகியுள்ளது.
குறித்த போராட்ட பேரணி ,பம்பலப்பிட்டி இராமநாதன் மத்திய கல்லூரியிலிருந்து கொட்டாஞ்சேனை வரை செல்லவுள்ளது.
இந்த போராட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டுள்ளனர்.
உயிரிழந்த மாணவி குறித்த பாடசாலையின் ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக சந்தேகம் இருப்பதாகவும், அதன் விளைவாக மாணவி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோர் தெரிவிக்கின்றனர்.
“அதிபரே வெளியே வா”, “அதிபரை கைது செய்”, “இறுதி வரை போராடுவோம்”, “கைது செய், கைது செய், கெட்டவனை கைது செய்”, “சங்கரனை கைது செய்” “வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்” என்ற கோசங்களையெழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரின் புகைப்படத்துக்கு செருப்பால் அடித்தும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அதன்பின்னர் கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு பேரணியாக சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
மேலும் இந்தச்சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் உறுதியளித்தனர்.
இறுதியாக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இறந்த மாணவிக்கு தத்தமது சமய அனுட்டானங்களின் படி ஆத்ம சாந்தி பிரார்த்தனையை நிகழ்த்தினர்.
இதேவேளை பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.