இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் மாவட்ட பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்கள் இரண்டு பணிப்பாளர்களுடன் யாழ்ப்பாண பிராந்திய அலுவலர்கள் அடங்கிய குழுவினர் இந்த பிரதேசத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செம்மணி மனித புதைகுழியில் மனித என்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள், பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி எதிர்வரும் ஓகஸ்ட் 05ஆம் திகதி பிற்பகல் 1:30 முதல் மாலை 5 மணிவரை குறித்த உடைகள் மற்றும் பிறபொருட்கள் செம்மணி சிந்துப்பாத்தி இந்து மயானத்தில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.