காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த உச்சிமாநாடு திங்கள்கிழமை எகிப்தின் ஷர்ம் எல்-ஷேக்கில் நடைபெற்றது. அந்த உச்சி மாநாட்டில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே சமீபத்தில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் , பிராந்திய ,சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் ஒன்றுகூடிய இந்த உச்சிமாநாட்டிற்கு எகிப்திய ஜனாதிபதி அப்தெல் ஃபத்தா அல்-சிசி , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இருவரும் இணைந்து தலைமை தாங்குகினர்.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது, மத்திய கிழக்கில் அமைதி , ஸ்திரத்தன்மையைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளை மேம்படுத்துவது ,பிராந்திய பாதுகாப்பு ,ஸ்திரத்தன்மையின் புதிய கட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக உச்சி மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
எகிப்து, கட்டார், துருக்கி , அமெரிக்கா ஆகியவற்றின் மத்தியஸ்தத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஷர்ம் எல்-ஷேக்கில் மூன்று நாட்கள் நடந்த தீவிர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை அமுலுக்கு வந்தது.
இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் காஸா நகரம், ரஃபா, கான் யூனிஸ் ஆகிய இடங்கலில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறுதல், உதவிக்காக ஐந்து கடவைகளைத் திறப்பது , பணயக்கைதிகள் , கைதிகளை பரிமாறிக்கொள்வது ஆகியவை அடங்கும்.
அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது பிடிபட்ட மீதமுள்ள 20 உயிருள்ள பணயக்கைதிகளையும் ஒப்படைத்ததாக ஹமாஸ் அன்றைய தினத்தின் தொடக்கத்தில் அறிவித்தது.
இதற்கிடையில், பரிமாற்ற ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இஸ்ரேலிய அதிகாரிகள் கிட்டத்தட்ட 2,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கத் தொடங்கியுள்ளனர்.
