செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது நேற்றைய தினம் (05) வியாழக்கிழமை குவியலாக எட்டு மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் போது, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (06) அவற்றுள் ஒரு மனித என்பு கூட்டு தொகுதி கால்கள் மடிக்கப்பட்டு அமர்ந்த (சப்பாணி) நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த என்புக்கூடு தொடர்பில் அவதானிப்பினை மேற்கொண்ட யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் இந்து நாகரிகத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எஸ்.ரமணராஜா, இந்த மனித என்புத் தொகுதி இந்து முறைப்படி முறையாக அடக்கம் செய்யப்பட்டமைக்கான சான்றுகள் காணப்படவில்லை எனவும் என்புக்கூட்டின் கைகள் காணப்படும் நிலைமை சந்தேகத்திற்கிடமானது உள்ளிட்ட காரணங்களால் இது முறையாக அடக்கம் செய்யப்பட்ட என்புக்கூடு இல்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான விபரமான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் செ.லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.
செம்மணி மனித புதைகுழிக்காக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவு பெறுவதுடன் அடுத்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் நாளைய தினம் நீதவான் திகதியிடுவார் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.
மேலும் செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த 25ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 12ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றம் 45 நாட்கள் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை 44 ஆவது நாளாக அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை கட்டம் கட்டமாக இதுவரையில் 53 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்ட 17 எலும்புக்கூட்டு தொகுதியுடன் இதுவரையில் 235 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 240 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளுக்காக நீதிமன்றம் அனுமதித்த 45 நாட்கள் இன்றைய தினம் சனிக்கிழமையுடன் நிறைவு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.