இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது மிக மோசமான மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள், சித்திரவதைகளுக்காக இலங்கையின் முன்னாள் தளபதிகள் மூவருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிக்கும் இங்கிலாந்து அரசு பயணத்தடையும் சொத்துகளின் மீதான முடக்கத்தையும் அறிவித்துள்ளது.
முன்னாள் படைத்தளபதிகள் சவேந்திர சில்வா, வசந்த கரனாகொட, ஜெகத் ஜெகசூரியா, விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி வினாயகமூர்த்தி முரளீதரன் ஆகியோர் மீதே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தபோது, இந்தோ-பசிபிக் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் எம்.பி, பிரதமர், வெளியுறவு அமைச்சர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கில் உள்ள அரசியல் தலைவர்களுடன் மனித உரிமைகள் குறித்து ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தினார். ‘சமூகங்கள் ஒன்றாக முன்னேற, கடந்த கால தவறுகளை ஒப்புக்கொள்வதும், பொறுப்புக்கூறுவதும் இருக்க வேண்டும், இன்று அறிமுகப்படுத்தப்பட்ட தடைகள் பட்டியல்கள் இதை ஆதரிக்கும். அனைத்து இலங்கை சமூகங்களும் வளர்ந்து செழிக்க முடியும் என்று நாங்கள் விரும்புகிறோம்.’ என்று குறிப்பிட்டார்.