‘சாதகமான சூழ்நிலைகள் நிலவும் போது, ஆழ்மனப் பதிவுகள் வெளிப்பட்டு கனிந்து வருகிறது.’ – பதஞ்சலி யோக சூத்திரம் 4.8
எமது அன்றாட வாழ்வின் நிகழ்வுகளும், காரணங்களும், செயல்களும் நாம் அறிந்தோ அறியாமலோ ஆழ்மனப் பதிவுகளை ஏற்படுத்துகின்றன. நல்வினை, தீவினை எனும் இந்த கர்ம பதிவுகள் சரியான காலம் கனியும் போது வெளிப்படுகின்றன. ஒருவர் இப்பிறவியில் தீவினைகள் செய்தாலும், அவர் முன்னர் செய்த நல்வினைகளிற்கான சூழ்நிலைகள் கனிந்து வருமானால், அவை தம்மை வெளிப்படுத்தி் நிற்கும். சிலவேளைகளில் தூயவர்கள் என்று நாம் நினைப்பவர்கள் கூட துன்பங்களில் உழல்வதைக் கண்டிருக்கிறோம்.
‘பிறப்பு, இடம் மற்றும் காலத்தால் பிரிக்கப்பட்டிருந்தாலும் நினைவுகளும், ஆழ்மனப் பதிவுகளும் ஒன்றாகவே தொடர்கின்றன.’ – பதஞ்சலி யோக சூத்திரம் 4.9
இறப்புக்கு பின்னரும் சீவனானது பல்வேறு பிறப்புகளை எடுக்கும் போது நினைவுகளும், ஆழ்மனப் பதிவுகளும் பிறவிகள் தோறும் தொடர்கிறது. பல்வேறு பிறவிகளாக இருப்பினும் சீவன் ஒன்றே. சில யோகிகள், ஞானிகளுக்கு முற்பிறப்பில் யாராக இருந்தோம் என்ற அறிவு கிடைக்கிறது.
‘ஆசைகள் என்றும் இருப்பதினால், இந்த ஆழ்மனப் பதிவுகளும் ஆதியில் இருந்து இருக்கின்றன.’ –சூத்திரம் 4.10
சகல உயிர்களினதும் வாழ்வின் மீதான பிடிப்பும், அதன் காரணமான தேடல்களினால் உண்டாகும் பற்றுகளும், ஆசைகளும் தொடர்கதையாகி, வினைப்பதிவுகளாகி பிறப்புகள் தொடர்வதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. இயற்கையின் விதியான காரணமும் விளைவும் என்றும் தவறுவதில்லை. சாதாரண மனிதர்கள் தம் அறியாமையினால் அன்றாடம் நிகழும் இந்த நிகழ்வுகளை அழமாக உணர்ந்து கொள்ளும் மனநிலையில் இருப்பதில்லை.
யோக வாழ்வு
அறியாமை, நான்-உணர்வு (தன்முனைப்பு), பற்று, வெறுப்பு மற்றும் வாழ்வின் மீதான மோகம் என்பன துன்பம் தரும் தடைகள்’ என்று சூத்திரம் 2.3 இல் பதஞ்சலி முனிவர் கூறுகிறார். அறியாமையினால் எமது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளோடு நம்மை பிழையாக அடையாளப்படுத்துவதன் மூலம் நான் என்ற ஆணவம் பிறக்கிறது. இதன் விளைவாக பற்றுகளும், விருப்பு- வெறுப்புகளும் ஏற்படுகின்றன. இவை வாழ்வின் மீதான மோகத்தையும், இறப்பு பற்றிய பயத்தையும் ஏற்படுத்துகின்றன.
தன்னை உணர்வதற்கான இந்த 5 தடைகளை வெல்லும் போது, எமது வினைப்பதிவுகள் மீதான வெற்றி அல்லது கட்டுப்பாடு எமது கையில் உள்ளதை உணர்கிறோம். இங்கே தான் தன்னை உணர்தலுக்கான யோக கல்வியும் அதன் காரணமான சுய விசாரணையும் சித்த சுத்திக்கும், சித்திக்கும் வழிவகுக்கிறது.
மூன்று வகையான வினைப்பதிவுகள்(கர்மா) இருக்கின்றன. இப்பிறவியில் அனுபவித்து வரும் “பிரார்த்த கர்மா’, இப்பிறப்பில் நாம் சேர்த்துக் கொண்ட ‘ஆகாமிய கர்மா’ மற்றும் வரப்போகும் பிறப்புகளில் செயற்படப் போகும் ‘சஞ்சித கர்மா’. யோக வழி நிற்பதன் மூலம் தன்னை அறியும் கலையை உணர்ந்த யோகியர் தியானம், மற்றும் சமாதி அனுபவங்களின் மூலம் தாம் மேலும் புதிய வினைப்பதிவுகளை சேர்த்துக் கொள்வதை நிறுத்திக் கொள்கின்றனர். இத்தகைய நிலையை அடைவதற்கு முதலில் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் மனதில் ஒரு அமைதி ஏற்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, யோக சாதனை மூலமோ அல்லது சுயமாகவோ மௌன நிலையை பயிற்சி செய்து நிலை பெறுவதன் மூலம் இறைநிலையோடு ஒன்றுதல் சாத்தியமாகிறது.
மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்
மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா
மனவாக்கு கெட்டவர் வாதனை தன்னால்
தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே. – திருமந்திரம் 2612
சீவர்களின் மனத்தாலும், சொல்லாலும், உடலின் செயலாலும் வினைகள் சேருகின்றன. கோபம், ஆசை, மயக்கம் போன்ற பல மனித வெளிப்பாடுகள் வினைப் பதிவுகளாகின்றன. இவை நேர்வழியில் நின்றால் வினை சேராது. நமக்கு வரும் செய்திகள், அன்றாட செயல்களை செய்யும் முன் அவற்றின் உண்மைத் தன்மை அறிந்து மனம், சொல், செயல் யாவும் ஒன்றிணைந்து பயணிக்கும் தவ யோகிகள்,, ‘எல்லாம் அவன் செயல்’ என்று தன்முனைப்பற்று செயலாற்றுவதன் மூலம் வினைப்பயன் தம்மைப் பற்றாது தப்பித்துக் கொள்கிறார்கள். இவர்களுக்கு கர்ம முடிச்சை வெற்றிகரமாக அவிழ்க்கும் கலை தெரிந்திருக்கிறது.
ஒரு செய்தி அல்லது சம்பவம் பற்றிய மனதின் பிழையான எண்ணங்களும், தீர்ப்புகளும் தேவையற்ற வினைப்பதிவுகளை எம் சித்தத்தில் ஏற்படுத்திவிட நாம் அனுமதிக்கக் கூடாது. ஒரு எதிர்மறையான கோப உணர்வு தோன்றும் போது அதற்கு எதிரான அன்பு போன்ற உணர்வு மனதில் எழும்படி அன்றாட வாழ்வில் நாம் பழகிக் கொள்ள வேண்டும். சகலரிலும் இறைத்தன்மையைக் காணும் மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இத்தகைய உண்மையை தேடும் பயிற்சிகள், பேருண்மையான இறைநிலையை உணர துணை நிற்கும்.
தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்பார்கள்
பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்
சென்னியில் வைத்த சிவன் அருளாலே – திருமந்திரம் 261
தன்னை உணர்ந்த யோகிகள், ஞானிகள் முன் செய்த வினைகளை அறுப்பதோடு, இப்பிறவியில் சேராமல் பார்த்துக் கொள்வார்கள். இதற்கு காரணம் அவர்கள் தவ வலிமையினால் சென்னி என்று சொல்லப்படும் தலையில் அல்லது துரியத்தில் அல்லது சிற்றம்பலத்தில் மனம் ஒடுங்கி, தான் அவன் என்ற உணர்வினால் உண்மை புலப்பட வினைத்துன்பம் சேராது தடுப்பார்கள் என்கிறார் திருமூலர். யோக பயிற்சியினால் சிற்றம்பலம் என்று சொல்லப்படும் தலைப்பகுதியில் உணர்வுநிலை இருக்கும் போது உண்மையை உணர்தலும்,, மன ஒருமைப்பாடும் மௌனநிலையும் கைகூடுகிறது.
ஆசை ஏற்படுவதற்கு காரணம், அதன் பலன், ஆதாரம் மற்றும் பற்றியிருக்கும் பொருட்கள் போன்ற காரணிகள் காரணமாய் இருப்பது போல , இந்த 4 காரணிகளும் இல்லாமல் போகும் போது ஆசையும் இல்லாமல் போகிறது. இங்கு காரணமாக இருபு்பது எமது எண்ணங்கள் , உணர்வுகளுடன் நம்மை அடையாளப்படுத்திக் கொள்ளுதல். எம் சுயத்தை , சாட்சி நிலையில் உணரக்கூடிய ஆன்ம நிலையை மறந்திருத்தல். இதன் காரணமாக ஏற்படும் பலனாக கர்ம வினைகளை ஏற்படுத்தும் செயல்கள் அமைகின்றன. இதனைத் தூண்ட ஆதாரமாக இருப்பது நமது நினைவுகள். பற்றியிருக்கும் பொருட்கள் காரணமாக இந்த ஆசை பிறக்கிறது. இந்த ஆசைகளை நிறைத்துக் கொள்ளும் சித்தம் தியானத்தினால் வெறுமையாகும் போது ஆசைகளும் மறைந்து விடுகின்றன.
ஆற்றல் மிக்க ஒரு யோகியின் வாழ்வு பழைய கர்ம பதிவுகளால் பாதிக்கப்படுவதில்லை. அவனுடைய ஆன்ம வழிகாட்டலில் மட்டுமே நடக்கிறது. இது உடல்-மன அடையாளங்களில் இருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளுவதால் சாத்தியமாகிறது.
சாதாரண மனிதர்களின் வாழ்வு வினைப்பயனின் படி நடக்கிறது. ஆனால் அதனை மாற்றும் ஆற்றல் தன்னிடம் உள்ளதை அவன் உணரவில்லை. யோக வாழ்வின் மூலம் வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் விழிப்புணர்வுடனும், உண்மையின் வழியிலும் வாழும் யோக வாழ்வு, வினைப்பதிவுகளைத் தடுப்பதோடு சமுதாயத்தை மாற்றும் சக்தி தனிமனித விழிப்புணர்வின் மூலம் சாத்தியமாகிறது. உண்மையில் வழியில் வாழ்வு தொடர்கிறது.