கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் இன்று பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இன்று காலை இடம்பெற்ற இப் போராட்டத்தின் போது உப்பளத்தின் முகாமைக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
- எமக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்க விடுவதில்லை.
- ஊழியர்களின் நலனுக்காக யாராவது குரல் கொடுத்தால் அவரை பிடித்து அடித்து வெளியே துரத்துங்கள் என கூறுவார்கள்.
- இது அரச நிறுவனம் போல் இல்லாது முதலாளித்துவத்துடன் கூடிய தனியார் நிறுவனம் போலவே செயற்படுகிறது.
- ஊழியர்களின் நலனுக்காக யாராவது அதிகாரி இங்கு குரல் கொடுத்தால் உடனே அவரை இடமாற்றம் செய்கின்றனர்.
- பல வருடங்கள் இங்கு பணியாற்றியவர்களுக்குக் கூட மதிப்பதில்லை.
- இங்கு பணிபுரியும் முகாமையாளர் உள்ளிட்ட பலர் உப்பு தொடர்பான அடிப்படை அறிவற்றவர்களாகவே காணப்படுகின்றனர். ஏற்கனவே இங்கு பணியாற்றியவர்களின் அனுபவங்களை கூட அவர்கள் கேட்பதில்லை.
- இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை ஹம்பாந்தோட்டை, மன்னார்,புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் எமது பகுதிகளுக்கு கொண்டுவந்து விநியோகம் செய்கின்றனர். இதனால் இரண்டு போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர். எமது பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி இருந்தும் ஏன் வெளி மாவட்டம் கொண்டு செல்ல வேண்டும்?
- மழை பெய்தால் எம்மை வேலைக்கு வரவேண்டாம் என கூறுகின்றனர். ஆனால் மழை பெய்தாலும் இங்கே செய்வதற்கு பல வேலைகள் உள்ளன. ஒரு தொழிற்சாலைக்கு இலாபம் வரும்போது நாங்கள் வேலை செய்கின்றோம், அதுபோல அந்த அந்ததொழிற்சாலைக்கு நஷ்டம் ஏற்படும்போதும் அந்த தொழிற்சாலை அதனை தாங்கிக்கொண்டு எமக்கு வேலையை வழங்கத் தான் வேண்டும். ஆனால் இங்கேஅவ்வாறான நடைமுறைகள் காணப்படுவதில்லை.
- ரஜ உப்பு என்ற பெயரை மாற்றம் செய்து ஆனையிறவு உப்பு என்ற பெயரில் மாற்றியதாக கூறுகின்றனர். ஆனால் இதுவரை பொதி செய்த உப்பு பைகளில் ரஜ உப்பு என்றே காணப்படுகிறது. ஆனையிறவு உப்பு என்ற பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
- பெண் ஒருவர் தினமும் 65 அந்தர் (3250 கிலோ) உப்பு அள்ள வேண்டும் என கூறி அவர்களை மிகவும் கொடுமைப்படுத்துகின்றனர்.
- இலாபத்தை பகிர்ந்து அளிப்பதாக அமைச்சர் கூறியிருந்தார் ஆனால் அதனை பகிர்ந்து வழங்குவதற்கு யாரும் தயாராக இல்லை, அந்த இலாபத்தை எமக்கு பகிர்ந்தளிக்கின்றனர் இல்லை.
போன்ற குற்றச் சாட்டுகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை நேரில் சென்று சந்தித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பொலிஸாருடன் சென்று உப்பள முகாமையாளரை சந்தித்து உரையாடிய அவர் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது உப்பள தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உரிய மட்டத்தின் கவனத்திற்கு விடயத்தை கொண்டு செல்வேன் எனத் தெரிவித்தார்.