Friday, February 20, 2026 11:25 am
நேற்று நடந்த 2026 ஐசிசி T20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கையை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணியானது குழு B இல் முதலிடத்தைப் பிடித்தது. இரு அணிகளும் ஏற்கனவே சூப்பர் 8 சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்திருந்திருந்த நிலையில் இந்த ஆட்டம் நடைபெற்றது.
179 ஓட்டங்கள் என்ற சிறந்த சேஸை முடித்த பின்னர் நடப்பு T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு நிலைப் போட்டியில் இதுவரை தோல்வி அடையாத அணியாக சிம்பாப்வே அணி மாறியது.
நேற்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது.
இலங்கை அணி சார்பில் துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்க 41 பந்துகளில் 62 ஓட்டங்களை எடுத்தார். பவன் ரத்நாயக்க 25 பந்துகளில் 44 ஓட்டங்களை அதிகபடியாக எடுத்தார்.
சிம்பாப்வே அணி சார்பில் பந்து வீச்சில் முசரபானி, பிராட் எவன்ஸ் மற்றும் கிரேம் க்ரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இவர்கள் தவிர ரியான் பர்ல் தனது பங்கிற்கு ஒரு விக்கெட்டினை வீழ்த்தினார்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கினை கடந்தது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரையன் பென்னட் 48 பந்துகளில் 63 ஓட்டங்களையும், அணித் தலைவர் சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக சிக்கந்தர் ராசா தெரிவானார்.

