Monday, January 19, 2026 2:21 pm
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு அனுமதி பெறாது, மருத்துவ பீடத்தில் இரண்டு மாதங்கள் கற்கையை தொடர்ந்த மாணவி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் மருத்துவ பீட புதுமுக மாணவர்களுக்கான கற்கை நெறிகள் ஆரம்பமாகியுள்ளன. அதன்போது கண்டியை சேர்ந்த பெரும்பான்மையின யுவதி ஒருவர், புதுமுக மாணவர்களுடன் பல்கலைக்கழக மாணவர் விடுதியில் பதிவுகளை மேற்கொண்டு, விடுதியில் தங்கியிருந்து, மருத்துவபீட விரிவுரைகளுக்கு கடந்த 2 மாத காலத்திற்கு மேலாக சென்று வந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை கற்கை செயற்பாட்டின் போது மாணவர்களை குழுக்களாக பிரித்துள்ளனர். இதன்போது 202 மாணவர்கள் காணப்பட வேண்டிய நிலையில் 203 மாணவர்கள் காணப்பட்டமையால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து, அது தொடர்பில் பரிசீலிக்கப்பட்ட போதே பல்கலைக்கழக அனுமதி பெறாத யுவதி ஒருவரும் மாணவிகளுடன் இணைந்து கடந்த 2 மாத காலமாக விரிவுரைகளில் கலந்து கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

