Tuesday, March 17, 2026 9:52 am
உள்நாட்டில் எரிபொருள் நுகர்வைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க சுகாதார அமைச்சின் சில குறிப்பிட்ட பிரிவுகளின் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த வாரத்தில் இருந்து மறு அறிவித்தல் வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் பின்வரும் அலுவலகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும்.
காசல் வீதியில் அமைந்துள்ள புதிய அமைச்சுக் கட்டிடத்தின் அனைத்துப் பிரிவுகள், நாரஹேன்பிட்டியில் உள்ள மலேரியா ஒழிப்புப் பிரிவின் அனைத்துப் பிரிவுகள், தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம், சுகாதார மேம்பாட்டுப் பணியகம் என்பன அவையாகும்.
போக்குவரத்து தொடர்பான அத்தியாவசிய பணிகள் ‘சுவசிரிபாய’ கட்டிடத்தில் இருந்து வழமை போல் முன்னெடுக்கப்படும்.
சுற்றுச்சூழல் சுகாதாரம், தொழில்சார் சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பிரிவின் உணவுப் கட்டுப்பாட்டுப் பிரிவில் உரிமம் வழங்கும் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின்படி புதன்கிழமைகளில் ‘சுவசிரிபாய’ வளாகத்தில் பணியாற்றுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சின் ஏனைய பிரிவுகள் புதன்கிழமைகளில் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டு இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

