Friday, March 27, 2026 2:58 pm
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பகுதியில் பெண்கள் கடத்தப்பட்டு கிணற்றில் வீசிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலுக்கு கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் உயிரிழந்த நளாயினி என்பவருக்கு நீதி கோரியும் இன்று வெள்ளிக்கிழமை பாரிய மக்கள் போராட்டமும் ஊர்வலமும் நடைபெற்றது.
வெல்லாவெளி 40ஆம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நளாயினி ரவி என்ற பெண் கடத்தப்பட்டு பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்களால் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்பாக ஒன்றுதிரண்ட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கறுப்புப் பட்டிகளை அணிந்தும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
காந்தி பூங்காவிலிருந்து ஆரம்பித்த பேரணி மாவட்டச் செயலகத்தை நோக்கிச் சென்றது. அங்கு மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்ததால் பொலிஸார் பஸ் வண்டிகளைக் குறுக்கே நிறுத்தி ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுத்தனர். இதனால் அவ்விடத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த மாவட்ட அரசாங்க அதிபர் போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த நிலையில் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன்போது ஜனாதிபதி மற்றும் சட்டத்தரணிகள் சங்கங்களுக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

இவ்ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் உள்ளுராட்சி மன்றத் தவிசாளர்கள் பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

