இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அன்று கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக ஜனநாயக அரசியல் செயற்பாட்டில் ஈடுபட்ட நாள் முதல், மாகாண சபை தேர்தல்களிலும் போட்டியிட்டு ஆசனங்களை கைப்பற்றி வந்தது.
13 ஆவது திருத்தச் சட்டம் இலங்கைத்தீவை பிளவுபடுத்தும் எனவும் தமிழ் ஈழம் அமையும் என்று கோசம் எழுப்பி அன்று எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி 1994 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சூழலில் மாகாண சபைகள் முறையை நன்றாக அனுபவித்து அதனைத் தங்கள் கட்சி அரசியல் வளர்ச்சிக்கும் பயன்படுத்திக் கொண்டது.
2009 ஆண்டு மே மாதம் போர் இல்லாதொழிக்கப்பட்ட பின்னரான சூழலில், மாகாண சபைகள் தேவையில்லை. குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டம் அவசியம் இல்லை என்ற தொனியல் ஜேவிபி குறிப்பாக அதன் முன்னாள் தலைவர் அமரர் சோமவன்ச அமரசிங்க மற்றும் பொதுச் செயலாளர் ரில்வின் ரில்வா ஆகியோர் அவ்வப்போது கூறியிருந்தனர்.
2017 ஆம் ஆண்டு மைத்திரி – ரணில் ஆட்சியின்போது மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டன. ஜேவிபி, தேசிய மக்கள் சக்தியாக தன்னை மாற்றிக் கொண்டு, 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வரை, மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஒருபோதும் கோரியதில்லை.
அதாவது, 2017 இல் மாகாண சபைத் தேர்தல்கள் நிறுத்தப்பட்ட நாள் முதல் 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன்னர் எதிர்க்கட்சியாக இருந்த காலங்களில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஜேவிபி ஒருபோதும் கேட்டதும் இல்லை ஆர்ப்பாட்டங்களை நடத்தியதுமில்லை.
ஆகவே, 1988 ஆம் ஆண்டு 13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்த்த மன நிலை தற்போதும் ஜேவிபிக்கு உள்ளது என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்தாலும், அடிப்படையில் ஜேவிபி என்ற மன நிலை அதுவும் தமிழ் மக்கள் சார்ந்த விவகாரங்களில் அந்த மன நிலை இருப்பதையே சமீபகால அணுகுமுறைகள் காண்பிக்கின்றன.
இப் பின்னணியில் முன்னாள் ஆயுத இயக்கங்களான ஈபிஆர்எல்எப், புளொட், ரெலோ, ஆகியவை மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என தொடர்ந்து கோருவதுடன் கூட்டங்களையும் யாழ்ப்பாணத்தில் நடத்தி வருகின்றன.
இந்த முன்னாள் இயக்கங்கள் 1988 ஆம் ஆண்டே மாகாண சபை முறைமையை இனப் பிரச்சினைக்குத் தீர்வாக ஏற்றுக் கொண்டிருந்தன.
ஆனாலும் விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக போராடியதால், தமது நிலைப்பாட்டை மாற்றி மாகாண சபை முறைமை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக அமையாது எனவும் ஆனாலும் ஆரம்ப புள்ளியாக அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கற்பிதம் செய்தன.
ஆனால், மிகச் சமீப நாட்களில் மாகாண சபைத் தேர்தல் முறைமை பற்றி அதிகமாக இந்த முன்னாள் இயக்கங்கள் உரையாட ஆரம்பித்துள்ளன.
இந்த முன்னாள் இயக்கங்கள் 2022 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதியிருந்தன. யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக கூட்டங்களை நடத்தி, அத்துடன் ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் ஆகியோருடன் தொடர்ச்சியாக உரையாடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரி அக் கடிதத்தை அனுப்பியிருந்தன.
ஆனால், அக் கடிதம் அனுப்பும் விவகாரத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பங்குகொள்ளவில்லை. அவர்கள் அதனை கடுமையாக எதிர்த்திருந்தனர். தமிழரசுக் கட்சி சில திருத்தங்களுடன் மோடிக்கு கடிதம் அனுப்பி செயற்பாட்டில் பங்குபற்றியிருந்தது.
ஆகவே, இங்கு புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், 13 ஆவது திருத்தச் சட்டத்தையோ மாகாண சபை முறைமையையோ சிங்கள அரசியல் தலைவர்கள் எவரும் விரும்பில்லை என்பதுதான்.
ஏனெனில்,2009 இற்குப் பின்னரான சூழலில் இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்பதும், ஆயுதப் போராட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அதனை சமாளிக்க அதுவும் இந்தியாவைச் சமாளிக்க இந்த 13 என்பதையும் மாகாண சபை முறைமைகள் என்பதையும் வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் அவ்வப்போது ஆட்சியில் இருந்து சிங்கள தலைவர்கள் நடத்திக் காண்பித்திருந்தனர்.
ஆனால், போர் முடிவுக்கு வந்த பின்னரான சூழலில் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா இலங்கை தொடர்பான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து தீர்மானம் நிறைவேற்றியபோது, 13 ஐ அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
தொடர்ச்சியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலும் 13 இருந்தது. ஆனால், மகிந்த ராஜபக்சவோ 2015 ஆட்சிக்கு வந்த ரணில் – மைத்திரி அரசாங்கமோ அதனை கவனத்தில் எடுக்கவில்லை.
மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்தபோது, 2013 இல் முதன் முறையாக வடமாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைத்திருந்தது. ஆனால், முதலமைச்சர் நிதியம் உள்ளிட்ட மாகாணங்களுக்குரிய பல அதிகாரங்களை செயற்படுத்த கொழும்பு நிர்வாகம் அனுமதித்திருக்கவிலலை.
வடக்கு கிழக்கு தனித் தனி மாகாணங்களாக பிரிக்கப்பட்ட பின்னர், 2007 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூட அதிகாரங்கள் இல்லை என்றே குறை கூறியிருந்தார்.
இணைந்த வடக்கு கிழக்கில் முதன் முதலாக முதலமைச்சராக பதவி வகித்திருந்த வரதராஜப்பெருமாளும் போதிய அதிகாரங்கள் இல்லை எனவும் அதிகாரங்கள் தெளிவில்லை என்றும் குற்றம் சுமத்தியிருந்தார்.
இப் பின்புலத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டுமென முன்னாள் ஆயுத இயங்கள் மீண்டும் கோருகின்றன.
ஆனால், இதுவரைக்கும் கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள அரசியல் கட்சிகளோ, முஸ்லிம் கட்சிகளோ மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு வற்புறுத்தவில்லை. ஏனெனில் அது அவர்களுக்கு அவசியம் இல்லை.
2009 இற்குப் பின்னரான சூழலில் 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்து குறைந்தது 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மத்திய அரசினால் ஒரு வர்த்தமானி அறிவித்தல் மூலம் மீளப் பெறப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்கில் சிங்கள மயமாக்கல் தொடருகின்றது. இராணுவ முகாம்களின் எண்ணிக்கையும் இராணுவத்தின் எண்ணிக்கைகளும் குறைக்கப்படவில்லை.
இந்த நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தினாலும், அதனை உரிய முறையில் செயற்படுத்த முடியாது. ஆகவே, தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒருமித்த குரலில் அரசியல் விடுதலைக்கான கோரிக்கைகளை அழுத்தம் திருத்தமாக முன்வைக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சுயாட்சி என்பதை உயர்வான அரசியல் கோரிக்கையாக முன்வைக்க வேண்டும். ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட 13 ஐ கோரும் போதும், தற்போது நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பின் கீழ் நிர்வாக அதிகாரங்களை மாத்திரம் வழங்கினால் போதும் என்ற மன ஓட்டம் சிங்கள அரசியல் தலைவர்களிடம் வந்துவிடும்.
இப்போது கூட அவ்வாறான மன நிலையில் இருந்து கொண்டுதான் 2017 இன் பின்னர் மாகாண சபைத் தேர்தலை நடத்த ரணில், கோட்டாபய ஆகியோர் விரும்பயிருக்கவில்லை. அதனையே அநுரகுமார திஸாநாயக்கவும் பின்பற்றுகிறார்.
13 ஐ அமுல்படுத்தி இருக்கின்ற அதிகாரங்கள் ஊடாக வடக்கில் கிழக்கில் எதனையும் சாதிக்க முடியும் என சில தமிழ்த்தேசியக் கட்சிகள் குறிப்பாக முன்னாள் ஆயுத இயக்கங்கள், தங்கள் அரசியல் வறுமையை பகிரங்கமாக வெளிப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு வரலாம்.
ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த நிலைப்பாட்டில் இல்லை. தமிழரசுக் கட்சி மதில் பூனை போன்று உள்ளது.
ஆகவே, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை என்று கோரும் நிலையில், எதுவுமே இல்லாத மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது ஏற்புடைய அரசியல் அல்ல. அதுவும் உள்ளக பொறிமுறை என ஜெனீவா தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், மாகாண சபை கோரிக்கைகள் தமிழ்த்தரப்பை மேலும் பலவீனப்படுத்தும்.
வடக்கு கிழக்கு இணைந்த சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு தான் பொருத்தமானது என்பதை இந்தியா விரும்பாது என இந்த முன்னாள் தமிழ் ஆயுத இயக்கங்களுக்குத் தெரியும்.
ஆனால், தொடர்ச்சியாகவும் வலுவானதாகவும் கோரிக்கைகளை ஒருமித்த குரலில் முன்வைக்கும் போது அதற்குச் செவிசாய்க்கும் நிலை உருவாகும்.
1949 ஆம் ஆண்டு கல்லோயா குடியேற்றத்துடன் சிங்கள அரசியல் தலைவர்கள் ஆரம்பித்த இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பை அவர்கள் 2009 இற்குப் பின்னரான சூழலில் மிக இலகுவாக வலுப்படுத்தி வருகின்றனர். நியாயப்படுத்தியும் வருகின்றனர். உலகமும் அதனை ஏற்கிறது.
ஆனால், மாகாண சபைத் தேர்தலை நடத்துங்கள் என்று கேட்டு தங்கள் அரசியல் விடுதலைக் கோரிக்கையின் உயர் தரத்தை தாங்களே தரம் தாழ்த்துவது பொருத்தமான அரசியல் உத்தி அல்ல.
அ.நிக்ஸன்-