Wednesday, March 18, 2026 4:09 pm
மத்திய கிழக்கில் நீண்டகாலமாக நிலவிய இஸ்ரேல் – ஈரான் இடையிலான பகை தற்போது பாரிய போராக உருவெடுத்து உலக நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளது. கடந்த காலங்களில் மறைமுகமான போராக இருந்த இஸ்ரேல் – ஈரான் மோதல் கடந்த பெப்ரவரி தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான நேரடிப் போராக மாறியுள்ளது என்று கூறலாம்.
இந்தப் போரினால் அதன் அண்டை நாடுகளும் ஐரோப்பிய நாடுகளும் தங்களின் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியமைக்கின்றது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அவரின் மறைவிற்குப் பிந்தைய அதிகார மாற்றம் பிராந்தியத்தின் பாதுகாப்பு சமன்பாடுகளை முற்றிலுமாக மாற்றி அமைத்துள்ளது.
இந்த நிலையில் ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் செயலாளரான அலி லாரிஜானி கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்படை அறிவித்திருந்தது. ஈரானின் மிக முக்கிய பதவி வகித்த இவர் படுகொலை செய்யப்பட்டிருந்தால் உண்மையில் ஈரானுக்கு அது ஒரு பெரிய இழப்பு என பல தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறிருக்க இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
2025 ஒகஸ்ட் மாதத்தில் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியானால் SNSC செயலாளராகவும் மறைந்த உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பிரதிநிதியாகவும் அலி லாரிஜானி நியமிக்கப்பட்டார். ஈரானிய ஊடகங்களில் அவர் உயர்மட்ட தலைவர் அலி கமேனியின் ஆலோசகராகவும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி அவர் 2008ஆம் ஆண்டு மே முதல் 2020 மே வரை 12 ஆண்டுகள் ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவி வகித்தார். 2008-2012 வரை நாடாளுமன்றத்தில் பிரின்சிபலிஸ்ட் குழுவின் தலைவராக இருந்தாலும் சமீப காலங்களில் “மிதவாத கன்சர்வேட்டிவ்” என விவரிக்கப்படுகிறார். சபாநாயகராவதற்கு முன்பு லாரிஜானி 2005 முதல் 2007 வரை ஈரானின் தலைமை அணுசக்திப் பேச்சுவார்த்தையாளராகப் பணியாற்றினார்.
அலி கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து லாரிஜானியை ஈரானிய ஆட்சியின் தலைவர் என இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியது. அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு நடவடிக்கையில் அலி கமெனிக்கு அடுத்த இலக்காக லாரிஜானி காணப்பட்டுள்ளார்.
ஈரானின் பல முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளை முன்னதாகவே படுகொலை செய்து விட்டதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்தது. குறிப்பாக ஈரானில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாதுகாப்பு ஆலோசகர் அலி ஷம்கானி, பாதுகாப்பு அமைச்சர் அமீர் நசிர்சாதே, புரட்சிகர காவல் படை தளபதி ஜெனரல் முகம்மது பக்பூர் மற்றும் ஆயுதப்படைகள் தலைமை அதிகாரி அப்துல்ரஹீம் மூசவி ஆகியோரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலின் விமானப்படை நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் தேசிய பாதுகாப்புத்தலைவர் அலி லாரிஜானியின் வகிபாகம் அளப்பெரியது.
நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலில் தெஹ்ரானுக்கு வடகிழக்கில் உள்ள பர்திஸ் என்ற இடத்தில் லாரிஜானி அவரது மகன் மொர்டெசா லாரிஜானி, சபையின் செயலகமான அலிரெசா பயாத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணைத் தலைவர் மற்றும் பலருடன் உயிரிழந்துள்ளனர். பதுங்குமிடமொன்றில் அலி லாரிஜானி தனது மகனுடன் இருந்தவேளை தாக்கப்பட்டதாகவே இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதுமட்டுமன்றி இஸ்ரேல் மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டின் துணை இராணுவப் படைத் தளபதி சுலைமானி மற்றும் அவரது துணைத் தலைவர் சையத் கரிஷி ஆகியோரும் உயிரிழந்ததாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக பாசிஜ் படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றி வந்த குலாம்ரெசா சுலைமானி அயதுல்லா கமேனிக்கு மிகவும் நெருக்கமானவராகக் கருதப்பட்டவர். இத்தாக்குதலில் பாசிஜ் படையின் பல உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் வெளியாகியுள்ளன. தெஹ்ரானில் உள்ள ஒரு ரகசிய தங்குமிடத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அமைப்பான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் தலைவரான அலி லாரிஜானிக்கு பதிலாக தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் செயலாளர் சயீத் ஜலிலி தற்காலிகமாக அந்தப் பொறுப்பை ஏற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உயிரிழந்த பின்னர் அவரது மகன் மோஜ்தபா காமேனி புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் மோஜ்தபா பலத்த காயமடைந்து கோமாவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில் தான் மறைந்த அயத்துல்லா அலி காமேனியின் வலது கரமாக செயல்பட்ட அலி லாரிஜானி ஈரானை வழி நடத்தி வந்தார்.
ஈரானின் பாதுகாப்பு தொடர்பான தீர்மானங்களை எடுக்கும் மிக முக்கியமான நபராக விளங்கிய அலி லாரிஜானியின் மரணம் தற்போதைய போர்ச் சூழலில் ஈரானுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

