Tuesday, December 16, 2025 12:59 pm
இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) 2026 தொடரின் 19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை (16) அபுதாபியில் உள்ள எதிஹாட் அரங்கில் நடைபெற உள்ளது.
இவ் ஏல நிகழ்வு இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் மொத்தமாக 350 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 240 இந்திய வீரர்களும் 110 வெளிநாட்டு வீரர்களும் அடங்கலாக , இப்போது 19 வீரர்கள் மேலதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து 77 வீரர்கள் வரை ஏலத்தில் எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 125 கோடி இந்திய ரூபாயை செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்க வைத்த வீரர்களுக்கான ஊதியம் போக மீதி தொகையை கொண்டு தான் மற்ற வீரர்களை வாங்க முடியும்.
இதன்படி , அந்த வகையில் அதிகபட்சமாக முன்னாள் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 64.3 கோடி ரூபாய் கையிருப்பு வைத்துள்ளது. அந்த அணி 13 வீரர்களை வாங்க வேண்டி உள்ளது.
5 முறை சம்பியனான சென்னை சூப்பர் கிங்சிடம் 43.4 கோடி இருப்பு இருக்கிறது. அவர்களுக்கு 4 வெளிநாட்டவர் உட்பட 9 வீரர்கள் தேவை.
மும்பை இந்தியன்ஸிடம் குறைந்த தொகையாக 2½ கோடி ரூபாய் மட்டுமே உள்ளது. 20 வீரர்களை தக்க வைத்துள்ள அந்த அணி இன்னும் 5 வீரர்களை எடுக்கலாம்.
ஒவ்வொரு அணியிலும் குறைந்த பட்சம் 18 முதல் அதிகபட்சமாக 25 வீரர்கள் வரை இடம் பெறலாம்.
இவ் IPL மினி ஏலத்தில் அவுஸ்திரேலிய சகலதுறை வீரரான கெமரூன் கிரீன் , இங்கிலாந்து சகலதுறை வீரரான லியாம் லிவிங்ஸ்டன் , ஜேக் பிரேசர் மெக்கர்க் , ரவி பிஷ்னோய் , இந்தியாவின் வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்டோருக்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களின் அடிப்படை விலை 2 கோடி ரூபாயாகும். இதே போல் மதீச பதிரன (இலங்கை) , குயின்டன் டி கொக் (தென்னாபிரிக்கா) , சையத் முஷ்டாக் அலி கிண்ண போட்டியில் அசத்தும் சர்ப்ராஸ் கான் ஆகியோரும் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
மினி ஏலத்திற்கு என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வகுத்துள்ள புதிய விதிமுறைப்படி வெளிநாட்டு வீரர்களுக்கு மட்டும் கட்டணத்தில் உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது அதிகபட்ச தக்கவைப்பு தொகை (ரூ.18 கோடி) அல்லது முந்தைய மெகா ஏலத்தில் அதிகபட்ச ஏலம் போன வீரரின் தொகை (ரூ.27 கோடி) இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.
எனவே மினி ஏலத்தில் கெமரூன் கிரீன் ரூ.25 கோடிக்கு மேல் ஏலம் போனாலும் அவருக்கு ரூ.18 கோடி மட்டுமே கிடைக்கும். மீதமுள்ள தொகை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் வீரர்கள் நலநிதிக்கு பயன்படுத்தப்படும்.
இந்த மினி ஏலமானது அணிகள் ஒவ்வொன்றும் தங்கள் அணி வலிமையை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதோடு , கடந்த ஏலங்களைப் போலவே இந்த ஏலமும் பரபரப்பாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

