Wednesday, October 22, 2025 1:07 pm
மாத்தறை மாட்டத்தில் உள்ள வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகர இனம் தெரியாத ஆயுததாரிகளினால் இன்று புதன்கிழமை சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பிரதேச சபையில் உள்ள தனது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் திடீரென அலுவலகத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதால் அங்கு பதற்றம் நிலவுகின்றது.
சஜித் பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபைத் தவிசாளரான லசந்த விக்ரமசேகர துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நிலையில், மாத்தறை மருத்துவமனையில் அனுமதிப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கொல்லப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாள உலக குழுக்களின் தலைவர்கள், அவர்களுடன் தொடர்பட்டு குற்றச் செயல்கள் பலவற்றில் ஈடுபட்டு வரும் நபர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு வருவதால், அது பற்றிய விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளர்.
இந்த நிலையில், வெலிகம பிரதேச சபைத் தலைவர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசியல் காரணங்கள் இருக்கலாம் என கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் மூத்த உறுப்பினரான லசந்த விக்கிரமசேகர படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை இக் கொலை அரசியல் பின்னணி என சிங்கள சமூக ஊடகங்கள் விமர்சிக்க ஆரம்பித்துள்ளன.

