Wednesday, January 7, 2026 10:33 am
தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தம், தாழமுக்கமாக வலுவடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது மேற்கு – வடமேற்குத் திசையில், நாட்டின் கிழக்குக் கரையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை நாளை வியாழக்கிழமை முதல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய வாய்ப்பபு காணப்படுகின்றது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

