Saturday, October 25, 2025 10:21 am
தமிழ் நாடு கரூர் மாவட்டத்தில் இடம்பெற்ற பாரிய உயிரிழப்புக்குப் பின்னர், விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிகள் அந்த மாவட்ட மக்களை சந்திக்கவுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு நிதியுதவி ஒன்றை வழங்கிய பின்னர் இந்த ஏற்பாடு செய்யப்படுவதாக தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.
பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்ப உறுப்பினர்களை, சென்னை பனையூர் பிரதேசத்தில் உள்ள அலுவலகத்திற்கு வரவழைத்து சந்திக்க த.வெ.க. தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கரூரில் கடந்த செப்ரெம்பர் 27 இல் நடந்த த.வெ.க. பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறவில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
சென்ற 18 ஆம் திகதி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் த.வெ.க, தலா 20 லட்சம் இந்திய ரூபாவை வைப்பிலிட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து விஜய் சந்திக்கவுள்ளார்.
கரூரில் மண்டபம் கிடைக்காததால் விஜய் வர முடியவில்லை. இதனால், பனையூரில் உள்ள அலுவலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் உறவினர்களுக்கு த.வெ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

