Tuesday, January 6, 2026 3:16 pm
கடந்த நாட்களில் உலகளவில் பெரிதும் பேசப்பட்ட ஒரு விடயமாக வெனிசுலோ ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி அமெரிக்காவினால் சிறைப்பிடித்து செல்லப்பட்தை குறிப்பிடலாம். இந்த விடயம் எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மையைத் தூண்டியுள்ளது.
இந்தநிலையில் தான் “ஐநா சாசனம் மற்றும் சர்வதேச சட்டங்களின்படி அனைத்து நாடுகளினதும் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகளும் இந்த விதிகளுக்குக் கட்டுப்பட வேண்டியது கட்டாயமாகும்” என இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜிதகேரத், அமெரிக்கா முன்னெடுத்த இராணுவத் தலையீடு மற்றும் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைது குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
வெனிசுவேலா 1498 ஆம் ஆண்டு ஸ்பெயினின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சுமார் 300 ஆண்டுகால பெரும் போராட்டங்களை அடுத்து 1811 ஆம் ஆண்டு சுதந்திரம் அறிவிக்கப்பட்டு 1830 ஆம் ஆண்டு வெனிசுவேலா ஒரு தனி குடியரசாக மலர்ந்தது.
ஒரு ஏழை விவசாய நாடாக இருந்த வெனிசுவேலா 1920 ஆம் ஆண்டுகளில் மசகு எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு உலகின் செல்வந்த நாடுகளில் ஒன்றாக மாறியது. வெறுமனே எண்ணெய் ஏற்றுமதியை மட்டும் நம்பி இருந்ததாலும், மற்ற தொழில்துறைகளை மேம்படுத்தாமையினாலும் வெனிசுலா பெரும் பொருளாதாரச் சரிவை சந்தித்தது. 2017 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின்படி வெனிசுவேலா மக்கள் உணவின்றி சராசரியாக 11 கிலோ எடையை இழந்தனர் என கூறப்படுகிறது.
80% க்கும் அதிகமான மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டதுடன், பொருளாதார நெருக்கடி மற்றும் வேலைவாய்ப்பின்மையால் சுமார் 70 லட்சம் மக்கள் வெனிசுவேலாவிலிருந்து வெளியேறி அண்டை நாடுகளான கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்காவுக்கு அகதிகளாக சென்றனர்.
இந்த நிலையில் தான் கடந்த 3ம் திகதி அமெரிக்கா திடீரென வெனிசுலா மீது பெரிய தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தது. தாக்குதலுக்கு முக்கியமானதொரு காரணமாக போதைப்பொருள் கடத்தல் காணப்படுகின்றது என டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்குப் பெரும் அளவில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு ஜனாதிபதி மதுரோவே மூளையாகச் செயல்படுவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. மதுரோவை ஒரு ‘சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்’ என அறிவித்து அவரைக் கைது செய்ய 15 மில்லியன் டொலர் சன்மானத்தையும் அமெரிக்கா அறிவித்திருந்தது.
அதுமட்டுமன்றி மதுரோவின் ஆட்சியில் உலகின் மிகப்பெரிய மசகு எண்ணெய் இருப்பைக் கொண்டுள்ள வெனிசுவேலாவின் எண்ணெய்துறை சிதைந்துவிட்டதாகவும் அதனை அமெரிக்கா சீரமைக்கும் எனவும் வெனிசுவேலாவின் பொருளாதார நெருக்கடியால் அதிகளவான மக்கள் அமெரிக்கா நோக்கி அகதிகளாக தஞ்சமடைகின்றனர் இது அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
கடந்த 3ம் திகதி அமெரிக்காவின் ‘டெல்டா போர்ஸ்’ மற்றும் 150-க்கும் மேற்பட்ட போர் விமானங்களின் அதிரடித் தாக்குதலால் வெனிசுலாவின் காரகாஸ் நகரில் முக்கிய இராணுவ நிலைகள் தகர்க்கப்பட்டன. அதுமட்டுமன்றி வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் சிறைபிடிக்கப்பட்டு அமெரிக்காவின் பாதுகாப்பில் உள்ளனர்.
இவர்களின் கைதை அடுத்து வெனிசுவேலாவில் பாதுகாப்பான முறையான மற்றும் அமைதியான முறையில் ஆட்சி அதிகாரம் மாற்றப்படும் வரை அந்நாட்டை அமெரிக்காவே வழிநடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
ஜனாதிபதி மதுரோ கைது செய்யப்பட்டதையடுத்து வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ் அந்த நாட்டின் எண்ணெய் வளம் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார்.
மதுரோ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாட்டை சரிசெய்ய நிர்வாகத்தில் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அமெரிக்கா அதன் மீது இரண்டாவது இராணுவத் தாக்குதலை நடத்தக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இது அந்நாட்டின் அரசியலை கேள்விகுறியாக்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
அமெரிக்காவிற்கு சட்டவிரோத போதைப்பொருள் ஓட்டத்தை குறைக்காவிட்டால் கொலம்பியாவும், மெக்சிகோவும் இராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளமை உலகளவில் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.
மதுரோவின் கண்கள் கட்டப்பட்டு கைவிலங்கு போடப்பட்ட படங்கள் வெளியானதை தொடர்ந்து இந்த விடயம் வெனிசுலா மக்களை மட்டுமல்லாது முழு உலகையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும். இந்த விடயத்தை ஆதரித்தும், கண்டித்தும் பல தரப்புக்கள் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கின்றன. வெனிசுலாவின் நகர்வுகளை சர்வதேச தரப்புக்கள் கவனித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ நேற்று நியூயோர்க் பெடரல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் மீது போதைப்பொருள் பயங்கரவாதம், கொக்கேய்ன் கடத்தல் சதி மற்றும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளர் ஊடாக தமது கருத்துகளை முன்வைத்த மதுரோ “நான் நிரபராதி. நான் ஒரு கண்ணியமான மனிதன். இப்போதும் நான் தான் எனது நாட்டின் ஜனாதிபதி” என உரத்த குரலில் தெரிவித்தார். மதுரோ மற்றும் அவரது மனைவி இருவரும் தங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்து’குற்றமற்றவர்கள்’ என வாதிட்டனர். இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் மார்ச் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி மதுரோ மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை சுவிட்சர்லாந்து அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் முடக்கியுள்ளது.
இதேவேளை வெனிசுலா தொடர்பில் அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது சர்வதேச சட்ட விதிகளை மதிக்காமை குறித்து தான் ஆழ்ந்த கவலையடைவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரெஸ் நேற்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
மதுரோ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் அமெரிக்காவின் சட்ட நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெறவுள்ள நிலையில் இந்த வழக்கு சர்வதேச கவனத்தை மேலும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

