Friday, November 28, 2025 10:42 am
எலிக்காய்ச்சல் காரணமாக 17 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம், பருத்தித்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
அல்வாய் கிழக்கு – அல்வாய் பகுதியை சேர்ந்த 17 வயதுடைய பிரதீபன் டக்சிகன் என்ற சிறுவனே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 22ஆம் திகதி குறித்த சிறுவனுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் காய்ச்சலை குணப்படுத்த தாயார் கை வைத்தியம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பின்னர் கடந்த 25ஆம் திகதி சிறுவனை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக 26ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். எலிக்காய்ச்சல் காரணமாக குறித்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுகின்றது. இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு இதே காலப்பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் வடக்கு பகுதியில் குறிப்பாக வடமராட்சி பகுதியில் எலிக்காய்சல் பரவியிருந்தமையும் இதனால் இறப்புக்கள் நிகழ்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.

