Wednesday, April 8, 2026 2:10 pm
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலால் அனைத்து நாடுகளுமே ஏதோவொரு வகையில் தாக்கத்தை அனுபவித்திருந்தன. போர் முடிவு குறித்து அனைத்து தரப்பினரும் எதிரபார்த்திருந்த நிலையில் அதற்கு சாதகமான நிலை ஒன்று உருவாகியுள்ளது.
ஈரானுடன் இரண்டு வார காலத்திற்கு போர்நிறுத்தத்தை அறிவிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த போர்நிறுத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்காக டொனால்ட் ட்ரம்ப் சில முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார்.
அதற்கிணங்க ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் உடன்பட வேண்டும் என்பதே அவரின் பிரதான நிபந்தனையாகக் காணப்படுகின்றது. இரு தரப்பினருக்கும் பொருந்தும் வகையிலான இருதரப்பு போர்நிறுத்தம் இது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப்போர் நிறுத்தத்தின் மூலம் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் மற்றும் குண்டுவீச்சுகளை இரண்டு வார காலத்திற்கு நிறுத்தி வைக்க முன்மொழியப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்ரூத் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மற்றும் பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் ஆகியோருடனான உரையாடல்களின் அடிப்படையில் ஈரானுக்கு எதிராக இடம்பெறவிருந்த தாக்குதல்களை நிறுத்திவைக்குமாறு அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு நிறுத்திவைக்க நான் சம்மதிக்கிறேன்.
ஹோர்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும் மற்றும் பாதுகாப்பாகவும் திறப்பதற்கு ஈரான் குடியரசு உடன்பட வேண்டும் என்பதே இதற்கான நிபந்தனையாகும். இது இரு தரப்பினருக்குமான ஒரு போர்நிறுத்தமாக இருக்கும். ஈரானுடனான நீண்ட கால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு உறுதியான உடன்படிக்கையை நோக்கிய பயணத்தில் நாம் வெகுதூரம் வந்துள்ளோம்.
இந்த இரண்டு வார கால அவகாசம் அந்த உடன்படிக்கையை இறுதி செய்து பூர்த்தி செய்ய உதவும். அமெரிக்காவின் ஜனாதிபதி என்ற ரீதியிலும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரதிநிதியாகவும் இந்த நீண்ட காலப் பிரச்சினை தீர்வை நோக்கி நகர்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீது நடத்தப்படவிருந்த மிகப்பாரிய தாக்குதலுக்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக டொனால்ட் ட்ரம்பின் இந்த போர்நிறுத்த அறிவிப்பு வந்தது அனைத்து தரப்பினரிடையேயும் ஒரு நம்பிக்கையையும் அமைதியையும் உருவாக்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் அமெரிக்காவிற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது அமெரிக்காவிற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் நமது ராணுவத்திற்கும் கிடைத்த வெற்றி என வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இதுவே தற்போது ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கும் நீண்டகால அமைதிக்கும் ஒரு புதிய கதவைத் திறந்துவிட்டுள்ளது என கரோலின் லெவிட் குறிப்பிட்டுள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் தற்காலிக போர்நிறுத்தத்தை அறிவித்ததைத் தொடர்ந்து ஈரான் மீதான தனது குண்டுவீச்சுத் தாக்குதல்களை இரண்டு வார காலத்திற்கு இடைநிறுத்த இஸ்ரேலும் சம்மதித்துள்ளது.
ஹோர்முஸ் நீரிணை ஊடான கடல்வழிப் போக்குவரத்திற்கு இரண்டு வார காலத்திற்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதாக ஈரானும் அறிவித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளுக்கு இந்த இடைநிறுத்தம் பயன்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10ம் திகதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என அமெரிக்கா மற்றும் ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஈரானும் சாதகமான பதிலை வெளிப்படுத்தியதனைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளன.
அதனடிப்படையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிந்தன. இன்று புதன்கிழமை பிரான்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 109.77 டாலரிலிருந்து 95.068 டாலராக சரிந்துள்ளது. போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பே எண்ணெய் விலையின் வீழ்ச்சிக்கு காரணமாகவுள்ளது.
அதேபோன்று உலக சந்தையில் இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4811.66 அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
வெறுமனே மூன்று நாடுகளுக்குள் நிலவிய யுத்தத்தின் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் அதன் தாக்கத்தை அனுபவித்தது என்றே சொல்ல முடியும். எரிபொருட்களின் தட்டுப்பாட்டால் ஏற்பட்ட நெருக்கடி ஒரு புறம். அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் ஒரு புறம் என அனைத்து தரப்பினரையும் நெருக்கடிக்குள் அமெரிக்கா இஸ்ரேல் ஈரானிடையேயான போர் தள்ளியது.
டொனால்ட் ட்ரம்பால் முன்வைக்கப்பட்ட போர்நிறுத்தத்pன் மூலம் ஒரளவு அமைதியான சூழ்நிலை ஏற்பட்டாலும் இதற்கான நிரந்தர தீர்வு நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையிலேயே தங்கியுள்ளது.

