Friday, November 7, 2025 3:04 pm
அமெரிக்க – ரசிய ஜனாதிபதிகள் அணு ஆயுதப் பரிசோதனை தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதால் எற்பட்டுள்ள பதற்றங்களுக்கு முடிவு காண வேண்டும் என ரசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அணு ஆயுத பிரிசோதனை தடை ஒப்பந்தத்தில் ரசியா கைச்சாத்திட்டுள்ளதால், அவ்வாறான பரிசோதனை நடவடிக்கைகளுக்கு ரசியா முயற்சிக்காது என ரசியமற்ரேஸ் (russiamatters) என்ற ரசிய ஆங்கில செய்தி ஊடகம் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் விடுக்கும் எச்சரிக்கைகள், ரசியாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக உக்ரெய்னுக்கு வழங்கப்பட்ட அமெரிக்கத் தயாரிப்பான தோமாஹாவெக் (Tomahawk) என்ற க்ரூஸ் ஏவுகணைகளை அனுமதிக்கலாமா என்று வெள்ளை மாளிகையில் உரையாடல் ஒன்று இடம்பெற்றிருக்கிறது..
அந்த விவாதத்தைத் தொடர்ந்து, ரசியாவின் இரண்டு பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீது அமெரிக்க எரிசக்தித் தடைகளை விதித்தது என்று அந்த செய்தித் தளம் தெரிவித்துள்ளது.
மேம்பட்ட ஆயுத அமைப்புகளை உருவாக்குதல், தமது பாதுகாப்புத் துறையை மேம்படுத்துதல் மற்றும் ரசிய இராணுவம் – கடற்படையை, சமீபத்திய ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பத்தால் விரிவுபடுத்தல் ஆகியவற்றுக்காக ரசியா உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
உக்ரெயன் போரில் ஓரெஷ்னிக் (Oreshnik) நடுத்தர தூர ஏவுகணை அமைப்பை உருவாக்கி பயன்படுத்தி வருதாகவும், பெலிஸ்டிக் (Ballistic) எதிர்ப்பு ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள, ரசியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் ஏவுகணைகளை நவீன அமைப்புகளுடன் பொருத்தியுள்ளதாகவும் ரசியா தெரிவித்துள்ளது.
விரிவான அணுசக்தி சோதனை தடை ஒப்பந்தத்தின் கீழ் (Comprehensive Nuclear-Test-Ban Treaty – CTBT) ரசியா எப்போதும் அதன் உறுதிமொழிகளை கடைபிடித்து வருகிறது.
ஆனால் அமெரிக்கா அல்லது ஏனைய நாடுகள் அணு ஆயுத பரிசோதனை நடத்தினால், நிச்சயமாக ரசியா பதில் நடவடிக்கை எடுக்கும் என்று ரசியா எச்சரித்துள்ளதாக அந்த செய்தித் தளம் கூறியுள்ளது.
உலக நாடுகள் ரசியாவை எதிரியாக பார்ப்பதைவிடவும் அமெரிக்க செயற்பாடுகள் உலகில் அழிவை நோக்கிச் செல்வதையே உணர வேண்டும் என்றும் அந்த செய்தித் தளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை, 2019 ஆம் ஆண்டு தனது முதலாவது பதவிக் காலத்தில் அணு ஆயுதப் பிரிசோதனை ஒன்றுக்கு டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்திருந்தார் என்றும், அமெரிக்கா அணு ஆயுத பரிசோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் என 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபரில் எச்சரித்து இருந்தாகவும் மற்றொரு ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

