தமிழ் இன அழிப்பு என்று கூறப்படும் யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளுக்காக சுமாா் இரண்டு கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மழை காலம் ஆரம்பித்துள்ளதால் தற்போதைக்கு அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க முடியாது என்று பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அகழ்வாய்வுப் பணிகளுக்காகக் கோரப்பட்ட 1.9 மில்லியன் ரூபாய் கிடைத்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலக சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் ஊடகங்களுக்கு விளக்கமளித்த போது தெரிவித்தார்.
நேற்று முன்தினம் திங்கட்கிழமை நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர், யாழ் நீதவான் செல்வநாயகம் லெனின்குமார், சட்டத்தரணிகள், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் அலுவலக அதிகாரிகள், அகழ்வாய்வு நிபுணர்களுடன் சித்துப்பாத்தி மனித புதைகுழியைப் பார்வையிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மனித புதைகுழி அமைந்துள்ள நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் உடனடியாக அகழ்வுப் பணிகளை அரம்பிக்க முடியாது எனவும், விரைவில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்
ஏற்கனவே 45 நாட்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்ட இரண்டாம் கட்ட அகழ்வாய்வு செப்டெம்பர் 6, 2025 அன்று நிறைவடைந்த போது, 240 மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன.
சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை மீட்கப்பட்ட பிற பொருட்களில், குழந்தை பால் போத்தல், பொம்மை, சிறுவர் காலணிகள் மற்றும் பாடசாலைப் பை ஆகியவையும் அடங்கும்.
கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களும் எலும்புக் கூடுகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணி பூரணி ஜோசப் மரியநாயகம் தெரிவித்தார்.
இதே வேளை, இந்த மனித புதைகுழி தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதே வேளை 1996 ஆம் கிரிசாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவி சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட செம்மணியில், மேலும் 600 இற்கும் அதிகமான மனித புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், அதனை அகழ வேண்டும் என மனித உரிமை அமைப்புக்கள் வருகின்றனர்.
தற்போது அகழப்பட்டுக் கொண்டிருக்கும் அரியாலை சித்துப்பாத்தி மயானத்துக்கு 500 மீற்றர் தொலைவில் செம்மணி மனித புதைகுழி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.