Wednesday, October 22, 2025 8:52 pm
இலங்கைத்தீவில் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டு வரை 8 ஊடகவியலாளர்கள் மாத்திரமே தாக்குதல்கள், அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாக சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை இடம்பெற்ற நாடளுமன்ற அமர்வில், வாய்மூல கேள்வி நேரத்தின்போது, எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கும்போது அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு எடுத்துக் கூறினார்.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான், 2010 ஆம் ஆண்டில் இருந்து காணாமல் ஆக்கப்பட்ட, கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் பற்றிய விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து வினா தொடுத்திருந்தார்.
குறிப்பாக, 2010ஆம் ஆண்டில் இருந்து பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை எத்தனை என்று முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.
பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரகீத் பண்டார எக்னலிகொட கடத்தப்பட்டுள்ளதுடன், மஹிந்த ஆரியவன்ச, தனுஸ்க சம்பத் செனவிரட்ன, பாரூக் முகமட் சுஹைல், சுப்ரமணியம் பாஸ்கரன், சமில ஜனித் குமார ஏகநாயக்க, அசங்க கிருஸாந்த பாலசூரிய, சினேஸ் உபேந்திர, இந்துனில் சிசிர விஜேநாயக்க ஆகியோர் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனதாக விபரித்தார்.
பிரகீத் எக்னலிகொட காணாமல் ஆக்கப்பட்ட மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் நடைபெறுகின்றன. ஏனைய அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவதாகவும் அமைச்சர் கூறினார்.
அதேவேளை, கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் பற்றி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எதுவும் கூறவில்லை.
குறிப்பாக, யாழ்ப்பாணத்தில் 2000 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் உள்ளிட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் 2004 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன், கொழும்பில் கொல்லப்பட்ட அரசியல் – இராணுவ ஆய்வாளர் தர்மரெண்டனம் சிவராம் ஆகியோர் உட்பட கொல்லப்பட்ட தமிழ் ஊடகத்துறையை சேர்ந்த 39 பேர் தொடர்பாக அமைச்சர் எதுவுமே கூறவில்லை.
வடக்கு கிழக்கில் தமிழ் ஊடகத்துறை இன்று வரை எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றியும் அமைச்சர் எதுவுமே கூறவில்லை. ஆனால் குறிப்பிட்ட சில சிங்கள ஊடகவியலாளர்கள் பற்றி மாத்திரம் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்திருக்கிறார்.
2009 இற்கு முன்னரும் 2010 இற்குப் பின்னரும் அச்சுறுத்தல்கள் – கொலை மிரட்டல்கள் போன்ற மனித உரிமை மற்றும் ஊடக ஜனநாயகத்துக்கு எதிரான செயற்பாடுகள் பலவற்றை தமிழ் ஊடகத்துறை எதிர்நோக்கி வருகிறது.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில், 2010 ஆம் ஆண்டில் இருந்து என்று மாத்திரம் கேள்வி அமைந்திருந்தாலும், போர்க்காலத்தில் இருந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் கொலை – அச்சுறுத்தல் பற்றிய தகவல்களையும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டிருக்க வேண்டும் என உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
2010 ஆம் ஆண்டில் இருந்து கொல்லப்பட்ட – காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தல் பின்தொடர்தல் போன்ற இன்னல்களை வடக்கு கிழக்கு தமிழ் ஊடகவியலாளர்களும் ஊடக நிறுவனங்களும் எதிர்கொள்கின்றன.
ஆனால் அது பற்றிக் கூட, அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வாய்திறக்கவில்லை என உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.