Wednesday, December 10, 2025 10:55 am
இன்று முதல் அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த முதல் நாடாக ‘அவுஸ்திரேலியா’ பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட ஐந்து மில்லியன் குழந்தைகளும் , 10 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் குழந்தைகளும் உள்ளனர் என பதிவுகள் வெளியாகியுள்ளன.
குழந்தைகள் மத்தியில் நாளுக்கு நாள் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால் அவர்களின் மனம் , உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் கவலை தெரிவித்தார்.
இதனால் , இணையவழி பாதுகாப்பு திருத்தச் சட்டம் மூலம் இதனை தடை செய்துள்ளார்.
இந்த சட்டத்தின்படி , 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் , ‘ இன்ஸ்டாகிராம் , பேஸ்புக் , டிக்டொக் , யூடியூப் , ஸ்னாப்சாட்’ போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை ஆரம்பிக்கவோ பயன்படுத்தவோ முடியாது.
16 வயதுக்கு உட்பட்டவர்களின் சமூக ஊடக கணக்குகளை நீக்க இச் சமூக ஊடகங்கள் தொடர்பான நிறுவனங்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மேலும் , புதிய கணக்கு ஆரம்பிப்போரின் வயதைச் சரிபார்க்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
தடையை மீறும் நிறுவனங்களுக்கு 297 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

