Thursday, October 23, 2025 5:21 am
புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு உயர்மட்ட தகவல்கள் கூறுகின்றன.
தமிழ்த்தேசிய கட்சிகளுடனும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் சுவிஸ்லாந்தில் கடந்த செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க உள்ளிட்ட பலரும் பங்குபற்றியிருந்தனர்.
இக் கலந்துரையடல் பற்றியும், குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் தெரிவித்த கருத்துக்கள் குறித்தும், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பாகவும், ஜேவிபியின் தேசிய சபையில் உள்ள சில மூத்த உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக விவாதித்தாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவாத்தின்போது மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்துவது இல்லை எனவும், புதிய அரசியல் யாப்பு ஒன்றுக்கான வரைபை தயாரித்து அதனை நிறைவேற்ற வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால், 2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கா அறிவிப்பார் எனவும் தமிழ் ஊடகங்களில் மாத்திரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டாம் என ஜேபிவியின் தேசிய சபை முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.
தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளமை, சிங்கள பௌத்த மயமாக்கல்கள் என்று பேசியிருந்ததை ஏற்க முடியாது என கூறிய நிஹால் அபேசிங்க, கஜேந்திரகுமார் அந்த சந்திப்பில் யதார்த்தமாக பேசவில்லை எனக் குற்றம் சுமத்தியிருந்தாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செய்த தவறுகளை தமது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது எனவும், குறிப்பாக யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்றும் நிஹால் அபேசிங்க கூறியதாக சுவிஸ்லாந்தில் சந்திப்பை ஏற்பாடு செய்த தமிழர் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
வடக்கு கிழக்கு இணைப்பு போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர்தரப்பு பேச முடியாது எனவும், அதனை அநுர அரசாங்கம் ஏற்காது என்றும் நிஹால் அபேசிங்க கூறியதாக மேலும் அறிய முடிகிறது.
அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாலும், ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் அதற்கு உடன்பட மறுப்பதாகவும் குறிப்பாக செயலாளர் ரில்வின் சில்வா முற்றாக மறுப்பதாகவும் ஜேவிபியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.