Thursday, January 8, 2026 10:08 am
தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற பட்டத் திருவிழா இம்முறையும் கோலாகலமாகத் தொடங்கியது. சிறுவர்கள், இளைஞர்கள் என குழுக்களாக இணைந்து பட்டங்களை கட்டி பறக்க விட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை (7) வல்வெட்டித்துறை றெயின்போ விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் கூடி பாரிய பட்டங்களை பறக்க விட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது எதிர்பாராத விதமாக பட்டம் ஏற்றும் வடத்துடன் இளைஞன் ஒருவர் வான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டமையினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அவரது நண்பர்கள் விரைந்து செயற்பட்டு குறித்த இளைஞரை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
இது போன்ற சம்பவங்கள் நடப்பது இது முதன்முறை அல்ல. கடந்த ஆண்டுகளிலும் பெரிய பட்டங்களை ஏற்றும்போது இளைஞர்கள் வானில் இழுத்துச் செல்லப்பட்ட காணொளிகள் இணையத்தில் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வல்வெட்டித்துறை பட்டப்போட்டி என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது அந்த மண்ணின் கலை மற்றும் வீரத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது.
எனவே இது குறித்து சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாகப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

