Sunday, December 7, 2025 9:45 pm
இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்புகளில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் முயற்சியின் மற்றொரு நடவடிக்கையாக அமெரிக்காவின் இரண்டு C-130J சூப்பர் ஹெர்குலஸ் (Super Hercules) விமானங்கள் கொழும்புக்கு வந்துள்ளன.
டித்வா புயல் கரையை கடந்த 72 மணி நேரத்திற்குள் அனர்த்த மீட்பு முயற்சிகளுக்கு ஆதரவாக இரண்டு மில்லியன் டொலர்களை அமெரிக்கா அறிவித்திருந்தது. புயலால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவசரகால தங்குமிடம், தண்ணீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளை வழங்கும் மற்றொரு ஏற்பாடாக அமெரிக்க விமானங்கள் இன்று வந்துள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து அமெரிக்க விமானப்படையின் 36 ஆவது தற்செயல் மீட்புக் குழுவுடன் குறித்த விமானங்கள் வருகை தந்துள்ளன.
இலங்கை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அடையாளப்படுத்தியுள்ள மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்களுக்கு அவசரகால உதவிகளை குறித்த குழு வழங்கும் என கூறப்பட்டுள்ளது.
உடனடித் தேவையுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் சுகாதார சேவைகளை சீர்ப்படுத்தவும் அமெரிக்காவின் இந்த உதவித் திட்டம் வழிவகுக்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவர் கூறினார்.

