வரவிருக்கும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளதால், மாணவர்களின் போக்குவரத்துக்குத் தேவையான மாற்றங்கள் குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பாக ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினருடன் முதற்கட்ட கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் மற்றொரு கலந்துரையாடல் நடைபெறும் என்றும் உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலகா கலுவேவா குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும். முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் 1 முதல் 6 ஆம் வகுப்பு வரையிலான பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நீடிக்கப்படவுள்ளது.
திருத்தப்பட்ட அட்டவணையானது நீண்ட 50 நிமிட பாடவேளைகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், கொவிட்-19 தொற்றுநோய் போன்ற முந்தைய தடங்கல்களால் இழந்த கல்வி நேரத்தை ஈடு செய்வதன் மூலமும் கற்றல் சூழலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.