Wednesday, March 4, 2026 10:17 am
இலங்கையில் காணப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய முக்கிய குழுவின் சார்பில், பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார்.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்’, முந்தைய சட்டத்தை விடவும் பாரிய மனித உரிமை மீறல் கவலைகளைத் தோற்றுவிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.
எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க அமைவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமுள்ள காணிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டாலும், அந்தச் செயல்முறை மிகவும் மந்த கதியில் உள்ளதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல்களில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அனைத்துச் சமூகங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமையை வரவேற்றுள்ள எலினோர் சாண்டர்ஸ், இது நல்லிணக்கத்துக்கு மிக அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
நிலைமாறுகால நீதி, இனவாத எதிர்ப்பு மற்றும் மனித உரிமை மீறல் வழக்குகள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வழங்கிய வாக்குறுதிகளைக் குழு கவனத்தில் கொண்டுள்ளது. இருப்பினும் அதன் முடிவுகள் இன்னும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே உள்ளன. சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான அச்சுறுத்தல்கள் தொடர்வதாகக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
திட்டமிடப்பட்டுள்ள ‘சுயாதீன அரச வழக்குதொடுநர் அலுவலகம்’ வெறும் பேச்சளவில் இன்றிச் செயற்பாட்டுக்கு வர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மோதல் காலங்களில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள குழு, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த நீதி கிடைப்பதை இலங்கை அரசு உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

