Tuesday, March 31, 2026 2:57 pm
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவோர் தமது தொகுதிகளில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றார்கள்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மாநிலத்தின் முக்கிய அரசியல் கூட்டணிகள் மற்றும் கட்சிகள் பலமுனைப் போட்டியில் களம் காண்கின்றன.
சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் மொத்தம் 22 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதில் தி.மு.க. 164 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பிற கட்சிகள் இணைந்துள்ளன. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 169 முதல் 170 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் இத்தேர்தலில் முதன்முறையாகக் களம் காண்கிறது.
டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வி.கே. சசிகலா தலைமையிலான அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து தனி கூட்டணியாகப் போட்டியிடுகின்றன.
சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்புமனு தாக்கல் செய்யப்படும். ஏப்ரல் 23 தேர்தல் நடைபெற்று மே 4 இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய் தாக்கல் செய்யும் முதல் வேட்புமனு இதுவாகும். அதேபோன்று தமிழக வெற்றிகழகம் போட்டியிடும் முதல் தேர்தலும் இதுவாகும்.
கடந்த 29ம் திகதி 234 தொகுதிகளுக்குமான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களை விஜய் அறிவித்திருந்தார். சென்னை பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் விஜய் போட்டியிடுகிறார்.
நேற்று விஜய் தனது வேட்புமனுவை தாக்கல் செய்யும் போது தனது சொத்து மற்றும் வருமான விபரங்களை வேட்புமனுவில் வழங்கியிருந்தார். நடிகர் விஜயின் சொத்து விபரங்கள் தற்போது பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
விஜய்யின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.404.58 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வங்கி சேமிப்புகள், முதலீடுகள், நகைகள் மற்றும் வாகனங்கள் அடங்கும். குறிப்பாக வங்கி கணக்குகளில் மட்டும் ரூ.213 கோடி இருப்பதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
அசையா சொத்துகளின் நடப்பு சந்தை மதிப்பு ரூ.220 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வீடுகள், நிலங்கள் உள்ளிட்ட நிலையான சொத்துகள் அடங்கும். விஜய் சுயமாக வாங்கிய அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.92 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய்யின் மனைவி சங்கீதா பெயரில் சுமார் 391 சவரன் தங்க நகைகள் உள்ளதாக வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த தங்க நகைகளின் எடை சுமார் 3132 கிராம் ஆகும். இதன் மதிப்பு ரூ.4.07 கோடியாகும். வெள்ளி பொருட்கள் 883 கிராம் எடையுடன் ரூ.1.20 கோடி மதிப்பில் உள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் விஜய் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.734 கோடி ஆகும். இந்த வருமானம் திரைப்படங்கள், விளம்பர ஒப்பந்தங்கள், முதலீடுகள் மற்றும் பிற வருவாய் மூலங்களிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படுகிறது.
வாகனங்கள் விவரத்தில் டொயோட்டா லெக்சஸ், இரண்டு பிஎம்டபிள்யூ கார்கள், டொயோட்டா வெல்ஃபையர், Maruti Swift கார் ரூ.5.35 லட்சம் மதிப்பிலும், TVS XL Super இருசக்கர வாகனம் ரூ.67400 மதிப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விஜய்யின் பூர்வீக சொத்துகளின் மதிப்பு ரூ.21.83 கோடியாகவும் மனைவி சங்கீதாவின் பெயரில் ரூ.15.51 கோடி மதிப்பிலான சொத்துகளும் உள்ளன. சென்னை நீலாங்கரை, அடையாறு, மயிலாப்பூர், சாலிகிராமம் உள்ளிட்ட 10 இடங்களில் அவருக்கு வீடுகள் உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனைவியின் பெயரிலும் பிள்ளைகள் சஞ்சய் மற்றும் திவ்யா சாஷா பெயர்களிலும் அசையும் சொத்துக்கள் காட்டப்பட்டுள்ளன.
விஜய் தனது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்ட பலருக்கு மொத்தம் ₹76 கோடி வரை கடனாக வழங்கியுள்ளார்.
மொத்தத்தில் விஜய்யின் சொத்து மதிப்பு பெரும் அளவில் உள்ள நிலையில் பெரிய அளவிலான கடன் அல்லது நிலுவைத் தொகை இல்லை என்று வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து சொத்து விவரங்களும் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு சான்றுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் விஜய் லயோலா கல்லூரியில் பி.எஸ்.சி படிப்பை முடிக்காது இடையில் நிறுத்திவிட்டதாகவும் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சொத்து விவரங்கள் விஜய் தனது அரசியல் பயணத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன என்று அரசியல் வட்டாரங்களில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

