Wednesday, December 17, 2025 3:31 pm
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் கடந்த 7ம் திகதி காணாமல்போன “மஞ்சள் அனகொண்டா” பாம்புக்குட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றரை அடி நீளமுடைய இவ் அனகொண்டா சட்டவிரோதமான முறையில் செப்டம்பர் 12 ஆம் திகதி தாய்லாந்திலிருந்து நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் , பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்கத் திணைக்கள அதிகரிகளால் கைப்பற்றப்பட்டு தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது.
குறித்த இவ் அனகொண்டா பாம்புக்குட்டி அண்மையில் காணாமல் போயுள்ளது. இது பற்றி மிருகக்காட்சிசாலையின் சேவையாளர் ஹேமந்த சமரசேகரவை விசாரிக்கையில், “மஞ்சள் அனகொண்டா” பாம்புக் குட்டி வைக்கப்பட்டிருந்த பெட்டியின் கதவு சரியாக மூடப்படவில்லை என்பதால் பாம்பு வெளியே சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மிருகக்காட்சிசாலையின் சேவையாளர்கள் அனைவரும் இணைந்து தேடியும் பாம்புக்குட்டி கண்டுபிடிக்கப்பட்டவில்லை.
இந்நிலையில், நீண்ட நாட்கள் கழித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் ஊர்வனங்கள் வைக்கப்பட்டுள்ள தோட்டத்தில் வைத்து “மஞ்சள் அனகொண்டா” பாம்புக்குட்டி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் , நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், தற்போது அது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

