Friday, November 7, 2025 9:07 am
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்றது…!
கிளிநொச்சி மாவட்ட திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில்,நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள்,பல்வேறு விடயங்களை சுட்டிக்காட்டியிருந்ததுடன், துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
கிளிநொச்சி மாவட்ட ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் சுட்டிக்காட்டிய சிறீதரன் எம்.பி,இடமாற்றப்படவிருக்கும் ஆசிரியர்கள் போர்சூழலிலும், அதன்பின் நலன்புரி முகாம்களிலும் அளப்பரிய சேவையினை வழங்கி மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள்.அவர்களில் அனேகமானவர்கள் காயப்பட்டவர்களாகவும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களாகவும் உள்ளனர். எனவே மனிதாபிமான ரீதியிலாவது அவர்களது இடமாற்றத்தினை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கோரியிருந்தார். இதற்குப் பதில் வழங்கிய வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு பற்றிக்டிறஞ்சன் அவர்கள் குறித்த விடயங்களை கருத்தில் கொள்வதாக உறுதி அளித்தார்.
மேலும்,ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களின் வித்துடல்கள் காணப்படும், தேராவில் மாவீரர் துயிலுமில்லத்தின் ஒரு பகுதியானது இன்றும் ராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறித்த ராணுவத்தினரை வெளியேற்றுவதனூடாக,மாவீரர் பெற்றோர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என வலியுறுத்தியதோடு,தொடர்ந்தும்,
*செருக்கன் பிரதேசத்தில் அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள உப்பளத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்,
*ஆனைவிழுந்தான் தொழில்நுட்பக் கல்லூரியினை ஆக்கிரமித்திருக்கும் இராணுவ முகாம் அகற்றப்பட வேண்டும் எனவும்,
*மாயவனூர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தரம் 09 வரை தரமுயர்த்தப்பட வேண்டும்,என்பதான பலவிடயங்கள் சிறீதரன் எம்.பியினால் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்வில்,வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன்,மாவட்ட செயலாளர் திரு முரளிதரன், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

