Friday, October 31, 2025 10:46 am
ஐரோப்பிய நாடொன்றுக்குச் சட்டவிரோதமான முறையில் முகவர் ஒருவரினால் அழைத்துச் செல்லப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
34 வயதுடைய இந்த இளைஞன், லாத்வியா (Latvia) குடியரசு எல்லையில் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக லாத்வியா எல்லைப் பகுதிக்குள் நுழைய முற்பட்ட இரு தமிழ் இளைஞர்களை எல்லைப் பாதுகாப்புக்கு நின்ற படையினர் கண்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் உயிரிழந்து சடலமாக கிடப்பதையும் அவதானித்துள்ளனர். குறிப்பிட்ட இந்த இரண்டு இளைஞர்களும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்று அவர்களின் அடையாள அட்டைகள் மூலம் எல்லைப் படையினர் இனம் கண்டுள்ளனர்.
உயிருடன் சோர்வடைந்திருந்த மற்றைய தமிழ் இளைஞரை படையினர் கைது செய்து மருத்துவ சிகிச்சை வழங்கிய பின்னர், பெலாரஸ் நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர். பெலாரஸ் எல்லைக்கு ஊடாகவே இவர்கள் லாத்வியா எல்லைக்குள் நுழைந்திருக்கின்றனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம் தடயவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. லாத்வியா குடியரசின் மருத்துவமனை ஒன்றில் சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.
லாத்வியா குடியரசுக்கு, வடக்கே எஸ்தோனியா, தெற்கே லித்துவேனியா, கிழக்கே ரசிய மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகள் உள்ளன. மேற்கே சுவீடன் நாட்டை பால்ட்டிக் கடல் (Baltic Sea) பிரிக்கின்றது.



