Monday, February 9, 2026 3:23 pm
செம்மணி மனித புதைகுழிக்குள் தேங்கி நின்ற மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கைள் இன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் முதல் யாழில் கடும் மழை பெய்தமையால் புதைகுழிக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் புதைகுழிக்குள் தேங்கி நிற்கும் மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கை இன்று நல்லூர் பிரதேச சபையின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.
புதைகுழிக்குள் இருந்து வெள்ளம் வெளியேற்றும் நடவடிக்கைகளை யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார், சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் , சட்டத்தரணிகளான நிரஞ்சன், ஞா.ரஜித்தா உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மழை நீரை வெளியேற்றிய பின்னர் புதைகுழி சேற்று தன்மையாக காணப்படுவதால், அடுத்த கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதம் 16ஆம் திகதி தீர்மானிக்கப்படும்.
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது 240 மனித என்புக்கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 239 என்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.


