Tuesday, November 4, 2025 2:02 pm
2024 ஆம் ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வு தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக சிறீதரனின் ஊடகப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் விபரம் வருமாறு
தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் திருவுருவப்படங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, நேற்று முன்தினம் கிளிநொச்சி மாவட்ட பொலிசாரினால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் சாரதியும் உருத்திரபுரம் வட்டாரத்தினை பிரதிநிதித்துவப் படுத்தும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினருமாகிய பாரதிதாசன் எழில்வேந்தன், நேற்று நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் குறித்த சூழலில், ஏறக்குறைய பன்னிரண்டு மாதங்களுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வில் பயன்படுத்தப்பட்ட மாவீரர்களின் திருவுருவப்படங்களினை காரணம் காட்டி, இரண்டு நாட்களுக்கு முன் வழக்குத்தாக்கல் செய்து கௌரவ உறுப்பினர் என்றும் பாராமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நடவடிக்கையானது, தமிழ் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையிலேயே முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய நடவடிக்கையானது கடந்த கால அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய நிகழ்வுகவதாகளை அச்சுறுத்தும் வகையிலேயே மேற்கொண்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

