Thursday, October 23, 2025 2:03 pm
தெல்லிப்பளை வித்தகபுரம் பிரதேசத்திற்குட்பட்ட பகுதியில் இலங்கை அரசாங்கமானது அத்துமீறி பொதுமக்களினுடைய தோட்டக்காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பாக, அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேரில் சென்று நிலமைகளை அவதானித்ததுடன், அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த சந்திப்பில், தோட்டக்காணிகள் விடுவிக்கப்படாமல் அடாத்தாக பறிக்கப்படுவதானது எமது அன்றாட இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் என்பதோடு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதுடன் விடுவிக்கப்படாத காணிகளை குறித்த பிரதேசத்தில் காணிகள் அற்ற குடும்பங்களுக்கு வழங்கி அவர்களை குடியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
கருகம்பனை சனசமூக நிலையத்தில் நடைபெற்ற குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத்தலைவருமான சிவஞானம் சிறீதரன், வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சுகிர்தன், தெல்லிப்பளை பிரதேச சபை உறுப்பினர் விஜயராஜ், மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர் மரியநேசன், பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தெல்லிப்பளை கிளையின் தலைவர் இளங்கோவன், சமூக மட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.