Tuesday, March 3, 2026 11:37 am
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் மற்றும் பணிபுரியும் பல இலட்சக்கணக்கான இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து அந்தந்த நாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளன.
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இலக்குகள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் பாரிய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் தங்கியிருந்த 19 இலங்கையர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு இஸ்ரேல் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில், அங்கு வீட்டுப்பணிப் பெண்ணாகப் பணிபுரியும் கடவத்தையைச் சேர்ந்த 43 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் சிறிய அளவில் காயமடைந்துள்ளார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஈரான் நடத்திய தாக்குதல்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை எனத் தூதுவர் அருஷா குரே தெரிவித்துள்ளார். அங்கு சுற்றுலா சென்றுள்ள இலங்கையர்கள் தமது விமான நிறுவனங்கள் மற்றும் பயண முகவர்களுடன் தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
குவைத்தில் உள்ள அமெரிக்க இராணுவ முகாம்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய போதிலும், அங்கிருக்கும் சுமார் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாகத் தூதுவர் லக்சித ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இலங்கையர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனங்கள் வெளியிடும் தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

