Saturday, November 15, 2025 10:11 am
இஸ்ரேல் நாட்டில் கட்டுமானத்துறையில் தச்சுவேலை (Carpentry) செய்து வந்த இலங்கையர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். காலி, படபொல, கொண்டகலை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய கே.கே. தரிந்து சானக என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் இருந்து வெளிவரும் நியூஸ்வயர் (newswire) என்ற ஆங்கில செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இஸ்ரேலுக்குச் சென்று கட்டுமானத் துறையில் தச்சராக பணியாற்றி வந்த நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அதிகாரிகள், டெல் அவிவில் உள்ள சலாமேஹ் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதுடன். கொலைக்கான காரணங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளனா்.
கொலைச் சம்பவத்தின் போது ஷனகாவுடன் இருந்ததாக கூறப்படும் இரண்டு இலங்கை பிரஜைகளும் இஸ்ரேலிய பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பொலிஸாரின் வாக்குலத்தின் பிரகாரம், 13 இலங்கையர்கள், கொலை நடந்த பூங்காவுக்கு அருகிலுள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்ததாகவும், புதன்கிழமை இரவு 11 மணியளவில், ஷனகாவும் மற்றொரு நபரும் அருகிலுள்ள பூங்காவில் மது அருந்தியதாகவும் தெரியவந்துள்ளது.
தங்குமிடப் பிரச்சினை தொடர்பாக எழுந்த சர்ச்சையினால் ஷனகா எச்சரித்தபோது, ஏனைய சிலரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் விபரம் தெரிய வந்துள்ளது.
ஷனகா சிறுநீர் கழிப்பதற்காக பூங்காவின் ஒரு மூலைக்கு சென்றபோதே அவருடை கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது.
சந்தேகத்தின் பேரில் ஒருவரை இஸ்ரேல் பொலிசார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரின் அடையாளங்கள் தொடர் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால், மேலதிக தகவல்களை வெளியிட முடியாதென பொலிஸார் தெரிவித்தனர்.

