Friday, December 12, 2025 1:46 pm
2026ம் ஆண்டு ஆரம்பமாகவுள்ள ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட (U19) ஆண்கள் உலகக் கிண்ணத்துக்கான 15 வீரர்கள் கொண்ட கிரிக்கெட் அணியை அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த அணியில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நாடன் கூரே (Naden Cooray) மற்றும் நிதேஷ் சாமுவேல் (Nitesh Samuel) ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

19 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேசிய சாம்பியன்ஷிப்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இவர்கள் உலகக் கிண்ணத்துக்கான இளையோர் அவுஸ்திரேலிய அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத் தவிர இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆர்யன் சர்மா மற்றும் ஜோன் ஜேம்ஸ் ஆகிய 2 வீரர்களும், சீன வம்சாவளியைச் சேர்ந்த அலெக்ஸ் லீ யங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அவுஸ்திரேலியா நடப்பு சாம்பியன்களாகப் போட்டியில் நுழைகிறது. தொடரில் அவுஸ்திரேலியா குழு A இல் அயர்லாந்து, ஜப்பான் மற்றும் இலங்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 15 முதல் பெப்ரவரி 06 வரை நமீபியா மற்றும் சிம்பாப்வேயில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
பெர்த்தில் நடந்த தேசிய U-19 சாம்பியன்ஷிப்பில் சாமுவேல் அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக காணப்படுகிறார். அங்கு அவர் 91 சராசரியில் 364 ஓட்டங்களை எடுத்ததுடன் தொடரின் ஆட்டநாயகனாகவும் தெரிவானமையும் குறிப்பிடத்தக்கது.



