Tuesday, February 17, 2026 10:17 am
2026ம் ஆண்டு ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் இரண்டு இலகுவான வெற்றிகளை ஈட்டியதன் மூலம் மிகச் சிறந்த ஓட்ட வேக அடிப்படையில் முன்னிலையில் இருக்கும் இலங்கைக்கு உண்மையான சோதனையாக நேற்று கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி காணப்பட்டது.
அயர்லாந்து, ஓமான் ஆகிய அணிகளை இலகுவாக வெற்றிகொண்ட இலங்கை நேற்றைய போட்டியில் வெற்றியீட்டினால் சுப்பர் 8 சுற்றில் விளையாட தகுதிபெறும் என்ற நிலை காணப்பட்டது.
ஸிம்பாப்வேயுடன் மோதி தோல்வியடைந்த அவுஸ்திரேலியா இலங்கையை வீழ்த்தும் என்றே பெரும்பான்மையான கணிப்பு இருந்தது. இதனால்த்தான் நேற்று நடைபெற்ற போட்டி இலங்கைக்கு பெரும் சோதனையானது என கணிக்கப்பட்டது.
இந்த நிலையில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண போட்டியில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த அபார சதத்தின் உதவியுடன் இலங்கை சுப்பர் 8 சுற்று தகுதியைப் பெற்றது. பெத்தும் நிஸ்ஸன்க குவித்த ஆட்டம் இழக்காத அபார சதம், குசல் மெண்டிஸ் பெற்ற அரைச் சதம் என்பன இலங்கையின் வெற்றியை சுலபமாக்கின என்றே சொல்ல வேண்டும்.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் சிறப்பான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்த ட்ராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 56 ஓட்டங்களையும், அணித்தலைவர் மிட்செல் மார்ஷ் 27 பந்துகளில் 54 ஓட்டங்களையும் விளாசினர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட்டுக்காகப் பலமான அடித்தளமிட்ட போதிலும் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியின் மத்திய பகுதியில் ஆட்டத்தைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சுழற்பந்து வீச்சாளர் துஷான் ஹேமந்த 3 விக்கெட்டுகளையும், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண 0.4 ஓவர்கள் வீசிய நிலையில் உபாதை காரணமாக வெளியேறியது அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.
அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 182 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
பெத்தும் நிஸ்ஸன்க ஆரம்பம் முதல் கடைசிவரை மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 52 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 100 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
ரி20 உலகக் கிண்ணத்தில் பெத்தும் நிஸ்ஸன்க குவித்த முதலாவது சதம் இதுவாகும். மேலும் இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை பெத்தும் நிஸ்ஸன்க நிலைநாட்டினார். ரி20 உலகக் கிண்ணத்தில் மஹேல ஜயவர்தனவுக்குப் பின்னர் சதம் குவித்த இரண்டாவது இலங்கை வீரர் பெத்தும் நிஸ்ஸன்க ஆவார். அது மட்டுமல்லாமல் பல்லேகலை மைதானத்தில் ரி20 உலகக் கிண்ண சதம் குவித்த முதலாவது இலங்கையர் என்ற பெருமையையும் பெத்தும் நிஸ்ஸன்க தனதாக்கிக்கொண்டார்.

பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் மெண்டிஸும் இரண்டாவது விக்கெட்டில் 66 பந்தகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். குசல் மெண்டிஸ் 38 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார். இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாக 3 அரைச் சதங்கள் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை குசல் மெண்டிஸ் நிலைநாட்டினார்.
குசல் மெண்டிஸ் ஆட்டம் இழந்ததும் பெத்தும் நிஸ்ஸன்க சதம் குவிப்பதற்கு மிகுந்து ஒத்துழைப்புடன் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 28 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பெத்தும் நிஸ்ஸன்கவும் பவன் ரட்நாயக்கவும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 34 பந்துகளில் 79 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை உறுதிசெய்தனர்.
போட்டிக்கு பின்னரான செய்தியாளர் சந்திப்பில் பேசிய இந்த வெற்றியின் நாயகன் பெத்தும் நிஸ்ஸங்க, “நாங்கள் ஏற்கனவே இந்த மைதானத்தில் விளையாடியுள்ளோம். எனவே ஆடுகளத்தின் தன்மை எங்களுக்கு நன்றாகத் தெரியும். முதலில் பந்துவீசுவது என்ற முடிவு சரியானது என்பதை நிரூபித்துள்ளோம்” என குறிப்பிட்டார்.
இப்போட்டியின் நாயகனாக பதும் நிஸங்க தெரிவானமை குறிப்பிடத்தக்கது.

