Thursday, January 22, 2026 2:04 pm
நியூசிலாந்தின் வடக்குத் தீவில் கனமழை மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஐந்து பிராந்தியங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் தங்கும் முகாம் ஒன்றில் இன்று காலை மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டது. முகாம் பகுதியில் மண்ணுக்குள் புதைந்தவர்களிடமிருந்து உதவி கோரும் குரல்கள் கேட்டதாகத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாயமானவர்களில் ஒரு சிறுமியும் அடங்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வீடுகளின் கூரைகள் மீது தஞ்சமடைந்திருந்த குடும்பங்களை மீட்புப் படையினர் உலங்கு வானூர்திகள் மூலம் மீட்டு வருகின்றனர்.
மவுண்ட் மௌங்கனுய் தவிர பாப்பமோவா மற்றும் ஆக்லாந்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் ஆற்று வெள்ளத்தால் பலர் மாயமாகியுள்ளனர்.
மண் ஏற்கனவே அதிகளவு ஈரப்பதத்துடன் காணப்படுவதால் மேலும் மழை பெய்தால் மரம் விழுதல் மற்றும் கூடுதல் மண்சரிவுகள் ஏற்படக்கூடும் என தேசிய அவசரகால மேலாண்மை எச்சரித்துள்ளது.

