Wednesday, February 25, 2026 4:16 pm
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான இரா. நல்லகண்ணு சென்னையில் இன்று புதன்கிழமை காலமானார்.
வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி பிற்பகல் 1:55 மணிக்கு காலமானார்.
எளிமை, நேர்மை மற்றும் போராட்ட குணத்திற்குப் பெயர் பெற்ற அவர் 13 ஆண்டுகளுக்கும் மேலாக CPI-ன் தமிழ்நாடு மாநிலச் செயலாளராக பணியாற்றியவராவார்
தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார்.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார்.

