Monday, December 8, 2025 12:15 pm
கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல் ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் விடுதி ஒன்றிற்கும் , தனியார் நிறுவனமொன்றிற்கும் நீதிமன்றம் 1000000 ரூபாவை அபராதமாக விதித்துள்ளது.
குற்றவாளியாக இனங்காணப்பட்ட பெலிஹுல் ஓயா மற்றும் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள விடுதி மற்றும் தனியார் நிறுவனமொன்றிற்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய , குறித்த சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் உள்ள குறித்த விடுதியானது , 100 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை 400 ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் , குறித்த நிறுவனத்திற்கு எதிராக பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அந்த அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.
இதன்போது , பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் குறித்த விடுதிக்கு ஒரு மில்லியன் ரூபா அபராதம் விதித்து உத்தரவிட்டது.
அதேவேளை , 70 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை அந்த விலையை விட அதிகமாக 230 ரூபாவிற்கு விற்பனை செய்த பண்டாரவளை,எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றிற்கு எதிராகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதுடன் இதன்போது குறித்த நிறுவனத்திற்கும் ஒரு மில்லியன் ரூபா அபராதம் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தினால் அறவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை கருத்திற்கொண்ட நீதவான் , 1000000 ரூபா அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும் , அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளில் இதுவரை சுமார் 25 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

