Friday, October 31, 2025 8:31 pm
நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள், அங்கம் வகிக்காத அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதான எதிர்க்கட்சிகள் விடுத்த வேண்டுகோளை, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்தின ஏற்றுக் கொண்டுள்ளார்.
பொலிஸ் மா அதிபர் பிரயந்த வீரசூரிய பாதுகாப்பு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் நாடாளுமன்றக் கட்டிடத் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் சபாநாயகர், பொலிஸ் மா அதிபர் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர் படுகொலை செய்யப்பட்ட பின்னரான சூழலில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், குறிப்பாக உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சிக்கல் பற்றி சஜித் பிரேமதாச எடுத்து விளக்கினார்.
பொலிஸ் மா அதிபர் மற்றும் சில அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு விடயத்தில் வெளியிடும் கருத்துக்கள் கவலை தருவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காடடினார். கவலை வெளியிட்டார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பாகவும் விளக்கிக் கூறப்பட்டது. ஆகவே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் உள்ள உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு என்று சஜித் எடுத்துக் கூறினார். கோரிக்கை விடுத்தார்.
இவற்றை ஏற்றுக்கொண்ட சபாநாயகர், உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும், குற்றப் புலனாய்வு பொலிஸாரின் அறிக்கைகளைப் பெற்று பாதுகாப்பு வழங்க வேண்டிய உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
இந்த உரையாடலில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், ஆனாலும் பொறுப்புடன் உறுப்பினர்கள் செயற்பட்டு இணக்கமான சூழல் உருவானது எனவும் நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில உறுப்பினர்கள் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதால், வாதப்பிரதிவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.


