Tuesday, February 3, 2026 3:06 pm
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியுடன் இன்று நடத்தப்பட்ட சுமூகமான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடனான விசேட கலந்துரையாடலில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்காக நடத்தப்படும் போட்டிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
பரீட்சையின் பின்னர் அடுத்த ஆறு மாத காலப்பகுதிக்குள் தகுதியுள்ள அனைவரையும் ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார். தமக்கு வழங்கப்பட்ட இந்த உறுதிமொழியை தொடர்ந்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை உடனடியாகக் கைவிடுவதாக அகில இலங்கை பாடசாலை அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஏழு வருடங்களாகப் பாடசாலைகளில் பணியாற்றி வரும் தங்களை எவ்வித நிபந்தனையுமின்றி ஆசிரியர் சேவையில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனேயே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

