Saturday, November 1, 2025 12:03 pm
ராஜபக்ச குடும்பம் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியில் இருந்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல்மோசடி – அதிகாரத் துஸ்பிரயோகம் போன்றவற்றை நிரூபிக்க முடியுமா என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்துக்கு சவால் விடுத்துள்ளார்.
சஜித் பிரேமதாசா தலைமையிலான பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர், எதிர்க்கட்சிகள் சுப நேரத்திற்காக காத்திருக்காமல் பொதுமக்களுக்காக ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
எதிர்வரும் 4 ஆம் திகதி கொழும்பு நுகேகொடையில் நடைபெறவுள்ள எதிர்ப்பு போராட்டத்தில், சஜித் பிரேமதாசா பங்குகொள்ள வேண்டும். அநுர அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே, இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப முடியும் எனவும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். சர்வாதிகாரத்தை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் செயற்பட்டால், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய பொறுப்பு அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் உண்டு என்றும் அவர் எடுத்துக் கூறினார்.

