Saturday, November 1, 2025 6:07 pm
வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத்தீவு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழுக்களின் கொலை, அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதால், பிரதான நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலைகளுடன் இணையும் பிரதான வீதிகளில் பாதுகாப்பு கமராக்களை பொருத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படும் இடங்கள் மிகவும் இரகசியமாக இருக்கும் எனவும், 24 மணி நேரமும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர் எனவும் இலங்கை தேசிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இன்று புதன்கிழமை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாகாணங்களிலும் இப் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படும் என்றும் குறிப்பாக மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முதலில் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பை மையமாகக் கொண்ட மேல் மாகாணத்தில் குறிப்பாக கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஏற்கனவே நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அவை போதுமானதல்ல என்றும், நெடுஞ்சாலைகளை இணைக்கும் பிரதான குறுக்கு வீதிகளிலும் பாதுகாப்பு கமாராக்கள் பொருத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார்.

