இந்தியா, ரசியாவிடம் இருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை ஏறத்தாள நிறுத்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.
சென்ற 15 ஆம் திகதி இது பற்றி அறிவித்திருந்த ட்ரம்ப், மீண்டும் அதனை உறுதியாகக் கூறியுள்ளார். ஆனாலும் ட்ரம்பின் இந்த அறிவிப்பில் குளறுபடிகள் இருப்பதாக (Mess Up) இருப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இருந்தாலும், இந்திய மத்திய அரசு டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த அக் கருத்தை நேரடியாக மறுக்கவில்லை. இந்திய வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ட்ரம்ப் கூறிய அக் கருத்தை மறுக்காமல் நாசூக்காக பதில் வழங்கியிருந்தார்.
ஆனால் இரண்டாவது தடவையாகவும் டொனால்ட் ட்ரம்ப், ரசியாவிடம் இருந்து இந்தியா மசகு எண்ணெயை கொள்வனவு செய்யாது என கூறியமை குறித்து இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அமைதி காக்கிறார்.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், உக்ரெய்ன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் வோஷிங்டன் வெள்ளை மாளிகையில் சந்திப்பு நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்திய – ரசிய பற்றி கருத்து வெளியிட்டிருந்தார்.
உக்ரெய்ன் – ரசியா போரை நிறுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் டொனால்ட் ட்ரம், ரசியாவுடனான இந்திய உறவை முடிவந்தவரை துண்டிப்பதற்கும் முற்படுவதாக ரொய்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரெய்ன் பாதுகாப்பு, எரிசக்தி தேவைகள் மற்றும் ரசியா மீதான பொருளாதாரத் தடைகளை அதிகரிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இச் சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டதாக ரொய்டர் தெரிவித்துள்ளது.
2018 முதல் 2020 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1.7% ஆக இருந்த ரசியாவின் பங்கு, 2023-24 நிதியாண்டில் 40% ஆக உயர்வடைந்துள்ளது.
இதனால், இந்தியாவுக்கு மசகு எண்ணெய் வழங்கும் நாடுகளில் ரசியா முதலாவதாக வந்திருந்தது.
இதன் காரணமாக அமெரிக்க எதிர்ப்பை இந்தியா எதிர்கொண்டது. இதன் காரண – காரியமாக ட்ரம்ப் நிர்வாகம் ரசிய எண்ணெய் இறக்குமதிக்கு இந்தியா மீது 25% கூடுதல் வரியை அறவிட்டது.
அதேவேளை, ரசிய இந்திய எண்ணெய் வர்த்தகம் பற்றிய புதிய தகவல்களின் பிரகாரம்,, ஒக்ரோபர் மாத முதல் பாதியில் இந்தியா ரசிய எண்ணெய் இறக்குமதியை மீண்டும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆகவே ரசியாவிடம் இருந்து இந்தியா எண்ணெய்க் கொள்வனவை நிறுத்தியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளமை முன்னுக்குப் பின் முரணான உள்ளதாக இந்திய ஊடகங்கள் விமர்சித்துள்ளன.