Sunday, October 26, 2025 6:49 am
*சர்வதேச போர்க்குற்ற விசாரணை, பௌத்த மயமாக்கல் எதிர்ப்பு போன்றவற்றை கைவிட்டு யதார்த்தமாக பேச வேண்டும் என்கிறார் நிஹால் அபேசிங்க…
*புதிய யாப்பில் சகல மக்களுக்கும் சமத்துவமாம்...
*கஜேந்திரகுமார் கூறியவை யதார்த்த அரசியல் இல்லை என்ற முடிவு...
— ——- ——–
புதிய அரசியல் யாப்பின் ஊடாகவே இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காண முடியும் என ஜேபிவின் விசேட கலந்துரையாடல் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.
ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் இது பற்றி கடந்த சில வாரங்களாக தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.
அநுர அரசாங்கத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து ஜேவிபியின் பிரதான சபையான தேசிய சபை உறுப்பினர்கள், குறிப்பாக அரசாங்கத்தின் அங்கம் வகிக்காத தேசிய சபை உறுப்பினர்கள் தீவிரமாக பரிசீலித்து வருகின்றனர்.
கடந்த ஒரு வருட கால ஆட்சியில் —
ஏற்பட்ட முன்னேற்றங்கள், எதிர்கொண்ட சவால்கள், எதிர்காலத்தில் நகர்த்தவுள்ள அரசியல் வியூகங்கள் பற்றி ஜேவிபியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையில் தேசிய சபை உறுப்பினர்கள் இந்த உரையாடல்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் —-
வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன மத மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையின் தேசிய விவகாரமாக எடுத்து கையாள வேண்டும் என்ற வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.
புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பது உள்ளிட்ட பல விடங்களை தேசிய சபை உறுப்பனர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
ஜேவிபியை மையப்படுத்திய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில்தான், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழித்து நாடாளுமன்ற ஆட்சி முறையை கொண்டு வரும் திட்டம் இருப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
அதாவது —
2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்கப்பதற்கான தயார்படுத்தல்களை தேசிய சபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர்.
அதேவேளை —
கடந்த செப்ரெம்பர் மாதம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், தமிழ்த்தரப்புடன் போசப்பட்ட விடயங்கள் குறிப்பாக பௌத்த மயமாக்கல் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அங்கு கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
தமிழரசுக் கட்சி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடனும் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபேசிங்க பங்குபற்றியிருக்கின்றனர்.
இக் கலந்துரையாடலில் கஜேந்திரகுமார் இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய முறைமைகள் பற்றிக் கூறிய கருத்துக்கள், சுவிஸ்லாந்து தமிழ் இளையோர் வெளியிட்ட கருத்துக்கள் பற்றியெல்லாம், நிஹால் அபேசிங்க, ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்களுக்கு எடுத்து விளக்கியிருக்கிறார்.
இது பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கொழும்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
அதேநேரம் —
மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டும் என ஈபிஆர்எல்எஃப், ரெலோ, புளொட் ஆகிய முன்னாள் விடுதலை இயக்கங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளமை பற்றியும், புதிய அரசியல் யாப்பில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் சில சரத்துகளை உட்புகுத்தி இனப்பிரச்சினைக்குரிய தீர்வை காண்பது பற்றியும் தேசிய சபை உறுப்பினர்கள் உரையாடியுள்ளனர்.
இந்த உரையாடலின் —
போது, மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், புதிய அரசியல் யாப்புக்கான வரைபை தயாரித்து அதனை நிறைவேற்றுவது மாத்திரமே அநுர அரசாங்கத்தின் முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் —
2026 ஆம் ஆண்டு முற்பகுதியில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அறிவிப்பார் எனவும் கொழும்பில் இருந்து வெளிவரும் சில தமிழ் நாளிதழ்களில் மாத்திரம் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், மாகாண சபைத் தேர்தல்களை தற்போதைக்கு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என ஜேபிவியின் தேசிய சபை முடிவெடுத்துள்ளதாக, அதாவது புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படும் வரை மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை என சில உறுப்பினர்கள் அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்துள்ளதாக அறிய முடிகின்றது.
அதேநேரம் —
தமிழ்த்தேசிய கட்சிகள், குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற கூட்டத்தின்போது வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்பட்டுள்ளமை, சிங்கள பௌத்த மயமாக்கல்கள் என்று பேசியிருந்ததை ஏற்க முடியாது என கூறிய நிஹால் அபேசிங்க, கஜேந்திரகுமார் அந்த சந்திப்பில் யதார்த்தமாக பேசவில்லை எனக் குற்றம் சுமத்தியிருந்தமை பற்றியும் ஜேவிபியின் தேசிய சபை உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்திருக்கின்றனர்.
கடந்த அரசாங்கங்கள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் செய்த தவறுகளையும் இழைத்த அநீதிகளையும் தமது அரசாங்கம் உடனடியாக நிவர்த்தி செய்ய முடியாது.
குறிப்பாக யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை விவகாரத்தில் உடனடியாக அரசாங்கம் முடிவெடுக்க முடியாது என்றும், நிஹால் அபேசிங்க சுவிஸ்லாந்து சந்திப்பில் கஜேந்திரகுமாருக்கு எடுத்துச் கூறிய விடயங்களைப் பகிரங்கப்படுத்தி, அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் என்பதை ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் ஜேவிபியின் தேசிய சபை தீர்மானித்துள்ளது.
குறிப்பாக —
தமிழரசுக் கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய கட்சிகளிடம் இந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக புரியவைத்து, ‘இலங்கை இறைமை’ ‘இலங்கை ஒற்றையாட்சி அரசு’ என்ற அடிப்படை நிலைப்பாட்டை ஏற்று அனைத்து இனங்களும் சமத்துவமாகவும் சகோதரத்துவமாகவும் வாழும் சூழலை உருவாக்கக்கூடிய புதிய அரசியல் யாப்புக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற சிந்தனையை வடக்கு கிழக்கில் ஏற்படுத்த வேண்டும் என ஜேவிபியின் தேசிய சபை வற்புறுத்தியுள்ளது.
அத்துடன் —
வடக்கு கிழக்கு இணைப்பு, சர்வதேச போர்க்குற்ற விசாரணை என்றெல்லாம் தமிழர்தரப்பு பேச முடியாது எனவும், அதனை அநுர அரசாங்கம் ஏற்காது என்பதையும் தமிழர்தரப்புக்கு இறுதி முடிவாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் பற்றியும் தேசிய சபை தீர்மானித்திருப்பதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை —
தேசிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று விரும்பினாலும், ஜேவிபியின் தேசிய சபை, அதற்கு உடன்பட மறுப்பதாகவும், குறிப்பாக செயலாளர் ரில்வின் சில்வா முற்றாக மறுப்பதாகவும் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.
இது பற்றி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் ரில்வின் சில்வா பேசியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
ஆகவே —
மாகாண சபைத் தேர்தல்கள் தற்போதைக்கு நடைபெறும் வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
அதாவது —
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அங்கம் வகித்துள்ள ஜேவிபி அல்லாத உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், ஜேபிவியின் தேசிய சபை உறுப்பினர்கள் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவை இல்லை எனவும் இரண்டு நிலைப்பாடு உள்ளமை தெரிகிறது.
ஆனாலும், ஜேவிபியின் முடிவுதான் இறுதி முடிவாக இருக்கும் என்றும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜேவிபியின் தமிழர் நிலைப்பாடு தொடர்பான விடயங்களை ஏற்று செயற்படுத்துக் கூடிய முறையில் சில புலம்பெயர் தமிழ் அமைப்புகள் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
அதேவேளை —
13 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்ய வேண்டும் என சர்வதேச பயங்கரவாத தடுப்பு பற்றிய இலங்கைச் செயற்பாட்டாளர் பேராசிரியர் ரெஹான் குணவர்த்தன வலியுறுத்தி எழுதும் ஆங்கிலக் கட்டுரைகள் பற்றியும், இந்தியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட 13 பற்றிக் கூறிய விடயங்கள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஆராயப்பட்டு வருகின்றன.
இந்த ஆராய்வுகளின் பிரகாரம், சோஷலிசம் – சமத்துவம் என்ற ஜேவிபியின் பிரதான கொள்கைகளின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்புக்கு ஏற்ப அனைத்து இனங்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற வலுவான செய்தி ஒன்றை ஜேவிபி வெளியிடும் என உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
13 ஐ தவிர்த்து, 2015 இல் உருவாக்கப்பட்ட ‘ஏக்கிய இராஜ்ஜிய’என்ற அரசியல் யாப்பு வரைபில் உள்ள சில பரிந்துரைகளை மாத்திரம் மீள் பரிசீலனைக்கு எடுப்பது என அநுர அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜேவிபி தகவல்கள் கூறுகின்றன.
அ.நிக்ஸன்-

