நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்படக் கூடிய அனர்த்த நிலைகளைக் கருத்திற் கொண்டு அனைத்து மாவட்டங்களுக்கும் இராணுவக் குழுக்களை அனுப்பி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் எம்.ஜே.ஆர்.எஸ்.மெதகொட இதனைத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்,144 குடும்பங்களைச் சேர்ந்த 585 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய குருநாகல் மாவட்டத்தில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 473 பேரும், அநுராதபுர மாவட்டத்தில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேரும், காலி மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
இதனிடையே நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாகப் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன் சில இடங்களில் போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், சியம்பலாண்டுவ – கொங்கஸ்பிட்டிய வீதியின் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் அதனூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.